சென்னை -எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர் விலகியதால், திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில் வீடுகள் அகற்றப்பட்டும் கடந்த ஐந்து மாதங்களாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் முடங்கியுள்ளன. இதனால் இந்தத் திட்டம் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை, எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயலபடுத்தப்பட்டு வருகிறது. எண்ணூர் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலையாக நவீன வடிவமைப்பில் அகலப்படுத்துதல், கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள் அமைத்தல், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், பாலங்கள், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். 1998 -இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் 2011- ஜனவரியில்தான் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இத்திட்டத்தில் தற்போது 95 சதவீத பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டபோதிலும் நான்கு இடங்களில் மட்டும் சில பிரச்னைகளால் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் முடங்கியிருந்தன.
வீடுகள் அகற்றப்பட்டும் தொடங்காத பணி: எண்ணூர் விரைவு சாலையில், திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியில் சாலை செல்லும் வழியில் சுமார் 446 மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தன. தங்கள் வாழ்விடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் எர்ணாவூரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியேற மறுத்து வந்ததையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் மட்டும் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் விடுபட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகள் நடைபெறுவதும் அதிகரித்து வந்தன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது. இதன்படி ரூ. 10 லட்சம் செலவில் 446 குடும்பங்களுக்கும் அடுக்குமாடி வீடுகள் அளிப்பதற்கான உத்தரவும், சாலைகளை உடனடியாக அமைக்க ஏதுவாக வீடுகளை உடனடியாகக் காலி செய்ய தலா ரூ.20 ஆயிரம் ரொக்கம் என ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. இதனையடுத்து வீடுகளை அகற்றும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதனையடுத்து ஓரிரு நாள்களில் உடனடியாகச் சாலைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து மாதங்களாகியும் இதுவரை எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை.
காரணம் என்ன? : ரூ.650 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தில் சுமார் ரூ.309 கோடி அளவிற்கு சாலைப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தடங்கல்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியவில்லை. இருப்பினும் பிரச்னைகளால் விடுபட்ட இடங்களைத் தவிர இதர பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு ஒப்பந்ததாரர் சென்றுவிட்டதாகவும், ஏற்கெனவே கால தாமதத்தால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விடுபட்ட இடங்களுக்காக காத்திருக்க இயலாது எனக் கூறிய ஒப்பந்ததாரர், இதற்கென ஒப்பந்தத் தொகையில் ரூ. 26 கோடிக்கு விலக்கு அளித்துவிட்டாராம். இதனையடுத்து விடுபட்ட இடங்களில் சாலை அமைப்பதற்கான எவ்வித திட்டமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இல்லை. இதனையடுத்து ஒப்பந்ததாரரை சமாதானப்படுத்தி வேலையை முடித்துத் தர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனினும் சுமார் 300 மீட்டர் சாலைக்காக அனைத்து இயந்திரங்களையும் எடுத்து வர வேண்டும். இதற்கு மிகுந்த செலவினம் ஏற்படும் என்பதால் ஒப்பந்ததாரர் தயக்கம் காட்டி வருவதாக ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்று இடங்களின் நிலை என்ன? வீடுகளை அகற்றிய பிறகும் சாலை அமைக்கப்படாததால் வீடுகளைக் காலி செய்ய வேண்டிய 446 குடும்பங்களில் சுமார் 40 சதவீத வீடுகள்தான் தற்போதுவரை இடிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாததையடுத்து இடிக்கப்பட்ட காலி இடமும் மீண்டும் இங்கு வசிப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தவிர எண்ணூர் விரைவு சாலையிலுள்ள ஜீவ வார்த்தை விடுதலை சபை, முத்துகிருஷ்ணசாமி மடம் ஆகியவற்றை அகற்ற தடை ஏதும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து பல ஆண்டுகளைக் கடந்தும் இவையிரண்டும் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது தவிர காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் புதிய மீன் அங்காடி வளாகம் திறக்கப்பட்ட பிறகும் இங்கு உயர்நிலை பாலம் அமைக்கும் பணிக்கு மீனவர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக பணிகள் முடங்கியுள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வடசென்னை மக்களின் கனவுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திருச்சி அருகே 216 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் சேரும் முதல் பெண் ஓட்டுநா் ரம்யா

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

