/

கமல் - கேஜரிவால் சந்திப்பு: அரசியலுக்கு அழைப்பு

ஊழல், மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கொண்ட நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என தில்லி

News image
நடிகர் கமல்ஹாசனை வியாழக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

DIN

ஊழல், மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கொண்ட நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னையில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடிகர் கமல்ஹாசனை சந்திப்பதற்காக சென்னைக்கு வியாழக்கிழமை வந்தார். நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அட்சராஹாசன் அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து வரவேற்று அழைத்து வந்தார். 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்துக்கு வந்த அரவிந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். 
ஒரு மணி நேரம் பேச்சு: கமல்ஹாசன் அலுவலகத்தில் உள்ள தனியறையில் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசினர். 
கமல் அரசியலுக்கு வர வேண்டும்: ஒரு நடிகராகவும் தனி மனிதராகவும் கமல்ஹாசனின் ரசிகன் நான். அவரின் நேர்மையும், துணிவும் எனக்குப் பிடித்தமானது. நமது நாடு மதவாதம் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த விஷயங்களுக்கு எதிராக ஒத்த கருத்துடையவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவதோடு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் நேர்மையாகவும், மதவாதத்துக்கு எதிராகவும் கருத்துக் கூறுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 
ஆனால், வெகு சிலர் மட்டுமே துணிச்சலாக அதற்கு எதிராகச் செயல்படுகின்றனர். அதில் கமல்ஹாசனும் ஒருவர். அவர் வெளியில் இருந்து குரல் கொடுக்காமல், அரசியலுக்கு வர வேண்டும். நாங்கள் இருவரும் தமிழக நிலவரம், நாட்டின் நிலவரம் குறித்து விவாதித்தோம். 
இந்தச் சந்திப்பு வருங்காலங்களிலும் தொடரும். எனக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளித்தமைக்காக கமல்ஹாசனுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார் அரவிந்த் கேஜரிவால்.
கேஜரிவாலுடன் ஒத்த கருத்து உண்டு: கமல்ஹாசன்
கேஜரிவால் என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கேட்டதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்கள் சந்தித்துப் பேசிக்கொண்ட விஷயங்கள் என்னவாக இருக்கும் என உங்களால் ஊகிக்க முடியும். ஊழலை எதிர்க்கும் அனைவருமே எனக்கு உறவினர்கள் ஆகி விடுகின்றனர் என்பதுதான் உண்மை. அந்தவகையில், இந்த உறவு தொடர்கிறது.
மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக கேஜரிவால் போராடி வருகிறார். அதில் எனக்கும் ஒத்த கருத்து இருப்பதால், நாங்கள் தற்போதைய சூழல் குறித்து விவாதிப்பதில் ஆச்சரியம் இல்லை. மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடி வருபவர்களிடம் அறிவுரைகள் வழங்குமாறு கேட்டு, அதிலிருந்து நான் கற்று வருகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.