மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தீபாவளிக்குத் தங்கம் வாங்கலாமே!

உலக அளவில் தங்கம் என்ற மஞ்சள் உலோகத்துக்கு என்றுமே தனி மவுசு உண்டு.

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 8:04 pm

எம். சடகோபன்

உலக அளவில் தங்கம் என்ற மஞ்சள் உலோகத்துக்கு என்றுமே தனி மவுசு உண்டு. பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால், மக்கள் அதை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால், விலை உயர்ந்தாலும் வாங்குவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றால் அது தங்கமாகத்தான் இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்லும் நிதி ஆலோசகர்கள் தொடர்ந்து அதே வார்த்தையைத்தான் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். இதன் மூலம் தங்கத்தின் மீது மக்களுக்குள்ள மோகத்தை காண முடியும். தங்கத்தின் தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தங்க ஆபரணங்கள் வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்றைய நவீன உலகில் தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும், மக்களிடம் குறிப்பாக இந்தியாவில் ஆபரணத் தங்கத்தை வாங்கி சேமிப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு, ஓய்வு கால திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் தங்கம்தான் நல்ல முதலீட்டுச் சாதனமாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. தங்கத்தின் பயன்பாடு, இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருவதை பார்த்தாலே இதை அறிந்து கொள்ளலாம்.
கி.மு. 610-ஆம் ஆண்டில் தங்கம், நாடுகளின் நாணயம் (கரன்சி) என்ற அந்தஸ்தையும் பெற்றது. அதன் பிறகு உலகம் முழுவதும் தங்கம் வழிப்பாட்டுப் பொருளாகவும் மாறியது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் லண்டனில் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு கரன்சியின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கரன்சி நடைமுறை சர்வதேச நாடுகளுக்கும் விரிந்தது. இப்படித்தான் சர்வதேச கரன்சிகளுக்கு தங்கம் இணையானது எனலாம்.
விலை பல மடங்கு உயர்ந்தாலும், தங்கத்தின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் மோகம் குறையவில்லை என்பதற்கு நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டமே சாட்சி.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவைப்பாடு அதிகரிக்கிறது. தங்க முதலீடு என்பது நம் பாரம்பரியத்தோடும் தொடர்புடையாதாக உள்ளது. குழந்தை பிறந்த 10-ஆவது நாளில் இருந்தே அதற்கு தங்க நகைகளை அணிவித்து அழகு பார்ப்பது நம் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதுவும் பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். அக்ஷய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது புதுப் பாரம்பரியமாகி விட்டது! தீபாவளி, பொங்கல் திருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் புத்தாடைகள் வாங்கும்போது அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல தங்க ஆபரணங்களை வாங்குவதும் கலாசாரமாக மாறி வருகிறது.
மனை, வீடு, நிறுவனப் பங்குகள், பரஸ்பர நிதித் திட்டங்கள் (மியூச்சுவல் ஃபண்ட்) ஆகியவற்றுக்கு இணையான முதலீடாக தங்கம் இப்போது மாறியுள்ளதாக நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். தமிழர்களும் தங்கத்தைப் பயன்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் உயர் கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந்தது; தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் நகைத் தொழிலும் அடங்கும். அதன் பிறகு ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் அத்தொழிலில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. ஆனால், தங்கத்துக்கு 3 சதவீதம் வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நகைக் கடை உரிமையாளர்களும், தங்கம் வாங்குவோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இப்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,800-2850 என்ற நிலையில் இருந்து வருகிறது. அதாவது 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.22,400 முதல் ரூ.22,800 என்ற நிலையில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.20,000 என்ற நிலையில் இருந்தது. திடீரென இந்த விலையுயர்வுக்குக் காரணம் என்ன என்பதுதான் பலரது கேள்வி.
உலக அளவில் எப்போதெல்லாம் பதற்றமான சூழ்நிலை, ஸ்திரமற்ற நிலை, பொருளாதார பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயரும். கடந்த சில நாள்களுக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. இது உலக நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, வடகொரியா நைட்ரஜன் குண்டை வெடிக்கச் செய்து சோதனையை மேற்கொண்டது. மீண்டும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை திடீரென வெகு வேகமாக உயர்ந்துள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 10-11 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றச் சூழல், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற சமிக்ஞை, சர்வதேச பொருளாதார சூழ்நிலை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உயர் கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவை நகைத் தொழிலில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவைப்பாடு அதிகரிக்கும் என்று நகைக் கடை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். இக்காலங்களில் தங்கத்தை பரிசுப் பொருளாக வழங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளதே காரணம் என்கிறார்கள்.
முன்பேர வர்த்தகத்தில் ஜூலையில் 1,220 அமெரிக்க டாலராக இருந்த ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை, இந்த மாதத்தில் சில நாள்களுக்கு முன் 1,357 டாலராக உயர்ந்தது. இப்போது 1,297 அமெரிக்க டாலராக உள்ளது. இது மேலும் உயர்ந்து 1,400 டாலர் வரை செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக மார்க்கெட் வட்டாரம் கணிக்கிறது. இதன் தாக்கம் இந்திய நகைத் தொழிலிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உயர் கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 2016-இல் தங்கத்தின் தேவைப்பாடு 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது நினைவிருக்கலாம். அதன் பிறகு தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் பணம் மோசடி சட்டத்தில் நகைத் தொழிலையும் சேர்த்துள்ளது. இது தவிர ஜிஎஸ்டி அமலாக்கத்தில் நிலவும் குளறுபடியான சூழல் ஆகியவை நகைத் தொழிலில் பாதிப்பு ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இருப்பினும், பண்டிகைக் காலத்தில் தங்க ஆபரணங்களின் தேவைப்பாடு கண்டிப்பாக உயரும் என்ற நம்பிக்கையில் நகை வர்த்தகர்கள் உள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரையிலும், தங்க நகை வாங்குவது நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் அதிகம் உள்ளது. இந்த ஆண்டு பருவ மழை நல்ல நிலையில் உள்ளது. விவசாயமும் செழிப்பான நிலையைக் கண்டுள்ளது. இதனால், தங்க ஆபரணத் தேவைப்பாடு கண்டிப்பாக அதிகரிக்கும் என்கிறார்கள். இப்போது சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள நகைக் கடைகளில் நகை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதத் தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மத்திய அரசின் பல்வேறு கெடுபிடிகளால் நகைக் கடை உரிமையாளர்களும், நுகர்வோரும் குழப்பத்தில் உள்ளதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர். தங்க நகையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கும் போது, பான் அட்டை எண் உள்ளிட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால், 'நகைக் கடைகளில் தங்கம்தான் விற்கப்படுகிறது, ஆயுதங்களோ வெடிமருந்துகளோ விற்கப்படுவதில்ல. அப்படி இருக்கும் போது இதுபோன்ற கெடுபிடிகள் எதற்கு?' என்கின்றனர் அத்துறையினர்.
மேலும், 'சிறிய அளவில் நகைக் கடைகள் வைத்திருப்போரிடம் கணினி உள்ளிட்ட வசதிகள் இருக்காது. அப்படி இருக்கும் போது, அவர்கள் நகை வரத்து, விற்பனை, விநியோகம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு எப்படி தர முடியும்' என்றும் கூறுகின்றனர்.
முன்பெல்லாம் தங்கத்தை அணிகலனுக்காக மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அதை ஒரு முதலீட்டு சாதனமாக பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால், தீபாவளி பொங்கல் பண்டிகையையொட்டி நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதத்தான் செய்யும் என்பது மட்டும் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.