பேரிடர் காலங்களில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
பேரிடர் காலங்களில் மக்களுக்கு விரைவாக அவசர செய்திகளை கொண்டு சேர்க்க ஏதுவாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் மூலமாக புதிதாக இணையதளம் (தமிழ், ஆங்கிலம்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் (www.tnsdma.tn.gov.in) தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு, நிலவியல், நீர் நிலப் புவியியல், வடிகால் அமைப்பு, மழையளவு, அரசின் பல்வேறு பேரிடர் மேலாண்மை திட்டங்கள், வானிலை அறிக்கைகள், பேரிடர்களை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் முக்கிய அலுவலர்கள், அவர்களது தொடர்பு எண்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆசிய பேரிடர் ஆயத்த மையம் என்ற சர்வதேச மையமானது, பலநாடுகளின் அரசுகள், ஐ.நா. முகமைகள், கல்வி மையங்கள், தனியார் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக வருவாய்த் துறையுடன் இணைந்து செயல்பட அந்த மையமானது விருப்பம் தெரிவித்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.