
புதுச்சேரி-தாய்லாந்து இடையே வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
"உதான்' திட்டத்தின் கீழ், சிறிய நகரங்களில் விமான சேவை அளிக்கும் விமான நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், 50 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஏற்கெனவே தடைபட்டிருந்த விமான சேவை, இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கியது. புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கும், பெங்களூருக்கும் பயணிகள் விமானம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, சேலம், கோவை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஹைதராபாதிலிருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு நேரடியாக விமானத்தை இயக்க ஏதுவாக புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுதளம் விசாலமாக இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் புதிய விமான சேவை வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. தினமும் காலை 11.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் ஹைதராபாத் விமானம், அங்கு பாங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பாங்காக் சென்றடையும். அதே போல, இரவு 10.40 மணிக்கு பாங்காக்கில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500, உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 என பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை, கோவாவுக்கு விமான சேவை தொடக்கம்: இதனிடையே, புதுச்சேரியில் இருந்து தில்லி, மும்பை, கோவாவுக்கு இணைப்பு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது. அதன்படி, காலை 11.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விமானம் புறப்பட்டு, ஹைதராபாத் சென்றடைந்தது. பின்னர், அங்கிருந்து இணைப்பு விமானம் புறப்பட்டு, மாலை 6.35 மணிக்கு கோவாவுக்கு சென்றடைந்தது. இதற்கான கட்டணம் ரூ. 8,266. அதேபோல, ஹைதராபாதிலிருந்து புறப்பட்ட மற்றொரு இணைப்பு விமானம் தில்லியை இரவு 11.45 மணிக்கு சென்றடைந்தது. இதற்கு கட்டணம் ரூ. 9,513.
புதுச்சேரியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்ட விமானம் பெங்களூர் சென்றடைந்து, அங்கிருந்து மற்றொரு இணைப்பு விமானம் மாலை 5 மணிக்கு மும்பையை சென்றடைந்தது. இதற்குக் கட்டணம் ரூ. 9,622.
தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதால் இணைப்பு விமான சேவையை உயர்த்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







