டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?

சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய புதிய சென்னை மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளதை

News image
Updated On :15 ஜனவரி 2018, 8:38 pm

முகவை க.சிவக்குமார்

சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய புதிய சென்னை மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுத்துள்ளது.
சென்னை மாவட்டம் விரிவாக்கம்: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பின் பின்னணி?: மாநிலத்தின் இதர மாவட்டங்களைப் போல், சென்னை மாவட்டம் அதிகாரங்கள் பெற்றதாக இல்லை. காரணம் இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகளில் மாநகராட்சி நிர்வாகமே முன்னிலை வகிக்ஹகிறது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையராக முதன்மை செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும். 
இந்நிலையில், சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கென வளர்ச்சித் திட்டத்திற்கான கூடுதல் நிதியையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருந்தார். இதனால் சில கோடி ரூபாய் நிதியாதாரத்தில் இயங்கி வந்த நகராட்சிகளில்கூட ரூ.100 கோடிக்கும் மேல் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அனைத்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால், வருவாய் எல்லைகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படாததால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. குறிப்பாக திருவொற்றியூரில் கச்சா எண்ணெயை கடலில் கொட்டியபோது ஒவ்வொரு நாளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
இதனால் அவர் இங்கு வந்து செல்வதற்கே முழு நாளும் செலவிடும் நிலையும் ஏற்பட்டது. திருவொற்றியூரில் அமைச்சர்கள் பங்கேற்கும் எந்த அரசு விழாவானாலும் ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
மனு கொடுக்க 50 கி.மீ. பயணம்: எந்தவொரு பிரச்னை என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்க வேண்டுமெனில் திருவள்ளூர்தான் செல்ல வேண்டும். மேலும் இதற்காக சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். 
தற்போது சென்னை மாவட்டத்துக்குள் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இனி 8 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5 கி.மீ. தூரத்தில் உள்ள தண்டையார்பேட்டை அலுவலகம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அணுக முடியும். 
மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒரே மாதிரியான எல்லைகளாக இருப்பதே சென்னை மாநகர மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணி ஆகும்.
இதுகுறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் நீண்டகாலமாக போராடி வந்தன. ஆனால், பொதுமக்கள் எவ்வித போராட்டமும் நடத்தாத நிலையில், இப்பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் இனி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து செயலாற்ற வேண்டும். மேலும், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுபவர், மாநகராட்சி ஆணையருக்கு இணையான அந்தஸ்தில் உள்ளவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி துணை ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை, உத்தரவு போன்றவைகளை அளிக்க முடியும். இதற்கேற்ற தேவையான சட்டத்திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றனர் அவர்கள்.
சென்னை மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள், சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகளையும் எளிதில் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.