ஜெனரிக் மருந்துகள் பரிந்துரை தொடரும் காத்திருப்பு...
மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுத வேண்டும் என்கின்ற


திருநெல்வேலி: மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுத வேண்டும் என்கின்ற மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் நிலைப்பாடு, நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மருத்துவர்கள், பிராண்டட் மருந்துகளை விற்கும் வர்த்தக நிறுவனங்கள், மருந்தக உரிமையாளர்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெறும் வகையில் நாடு முழுவதும் "ஜன் ஒளஷதி' என்ற பெயரில் ஜெனரிக் மருந்துகள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராண்ட் பெயர் மருந்துகளைத் தவிர்த்து, அனைத்து மருத்துவர்களும் அடிப்படை மூலக்கூறு மருந்துகளை பரிந்துரை செய்யும் பட்சத்தில், குறைந்த விலையில் தரமான மருந்துகள், தகுதியான மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
அடிப்படை மூலக்கூறு பெயரில் விற்பனையாகும் மருந்தின் விலை குறைவாக இருக்கும். மருத்துவர்களிடையே இதற்கான பிரசாரம் இருக்காது. இதற்கென விற்பனை பிரதிநிதி இருக்க மாட்டார். மருத்துவர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு இலவச சலுகைத் திட்டங்கள் இருக்காது. இம்மருந்துகளை சந்தைப்படுத்த அதிக செலவு ஆகாததால், இத்தகைய மருந்துகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது.
மருந்துகள் மட்டுமல்லாமல், சில வகை மருத்துவ உபகரணங்களின் விலையும் குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் மீட்டர், பெருநிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபல பிராண்ட் பெயரில் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. அதே நேரம் ஜன் ஒளஷதி மருந்தகத்தில் சர்க்கரை நோய் அளவறியும் டிஜிட்டல் மீட்டர் விலை சுமார் ரூ.480தான்.
இதே போல உடல் வலி முதல் புற்றுநோய் வரையிலான உபாதைகளுக்கான மருந்துகள், பிராண்டட் ரகங்களில் 2 முதல் 15 மடங்குவரை அதிக விலையில் விற்பனையாகின்றன.
விழிப்புணர்வு இல்லாமை
ஜெனரிக் மருந்துகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காதவர்கள் மட்டுமன்றி படித்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைப்பது பிராண்டட் (வர்த்தக பெயர் கொண்டவை) மருந்துகளையே.
பிரத்யேகமான விற்பனைப் பெயரில்லாத, மூலக்கூறின் பெயரை மட்டுமே கொண்ட ஜெனரிக் மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருந்தபோதும், விலை அதிகம் கொண்ட, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிராண்டட் மருந்துகளையே மக்கள் கடைகளில் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
மருத்துவர் பரிந்துரைத்த பிராண்டட் மருந்தும், மருந்துக்கடைக்காரர் கூறிய ஜெனரிக் வகை மருந்தும் ஒரே மூலக்கூறுகளை கொண்டதுதான் என்கின்ற தெளிவும், விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாதது, பிராண்டட் மருந்து நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாகிறது.
அனைத்து மருந்துகளும் ஜெனரிக் மருந்துகளாகுமா?
இதுகுறித்து மருந்துக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியது: மருத்துவர்கள் பெரும்பாலும் முன்னணி நிறுவனங்கள் தயாரித்த மருந்துரைகளையே பரிந்துரை செய்கின்றனர்.
நிறுவனங்கள், விற்பனை பிரதிநிதிகள் மூலம், மூலக்கூறுகளின் புதிய சேர்க்கைகள், கண்டுபிடிப்புகள் ஆகியன குறித்து தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்து தெளிவுபடுத்துவதால், மருத்துவர்கள் தொடர்ந்து பிராண்டட் மருந்துகளையே எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் வேண்டுமானால் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகள் எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சாதாரண தலைவலியில் இருந்து நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பிராண்ட் பெயரில்லாத ஜெனரிக் மருந்துகள் உள்ளன. இணையத்தில் தேடினாலே, ஒரே மூலக்கூறில் ஏராளமான நிறுவனங்கள் மருந்து தயாரித்திருப்பதை நாம் காணலாம்.
ஆனால், மக்களோ விலை குறைந்த மருந்து வீரியம் இல்லாதது போன்றும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கூடுதல் விலை கொண்ட மருந்துகளே வீரியமிக்கது போலவும் கருதி, ஜெனரிக் மருந்துகளை வாங்க உடன்படுவதில்லை.
எனவே, ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க, நாட்டில் பிராண்டட் மருந்துகள் என்று எதுவும் இல்லாமல், அனைத்து மருந்துகளையும் ஜெனரிக் மருந்துகளாக மாற்றிவிட்டால், மருந்து விலை குறைந்துவிடும். அவை அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதற்கென ஜனஒளஷதி போன்ற தனி மருந்து கடைகள் திறக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்றார் அவர்.
ஜெனரிக் மருந்துகளில் தரம் குறைய வாய்ப்பு?
இதுகுறித்து பிராண்டட் மருந்துகள் விற்பனை பிரதிநிதிகள் சிலர் கூறியது: மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என பல தரக்கட்டுப்பாடுகள் உள்ளன. பல கட்ட சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும். ஆனால் ஜெனரிக் மருந்துகளுக்கு என தனியாக வர்த்தகப் பெயர் இல்லாததால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உறுதி செய்ய முடியாது. மலிவான மூலப்பொருள்களை கொண்டு, மருந்துகளை தயாரிக்கும்போது விலை குறைவாக விற்க வாய்ப்பு உண்டு. ஆனால் மருந்துகள் நிச்சயமாக தரமற்றதாகவே இருக்கும். இதனால்தான் மருத்துவர்கள் பெரு நிறுவனங்களின் தயாரிப்புகளையே பெரும்பாலும் பரிந்துரைப்பார்கள் என்றனர்.
விதிகளை கடுமையாக்காமல் மாற்றம் ஏற்படாது...
சிவகங்கையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜன் ஒளஷதி மருந்தகம் நடத்தி வரும் கண்ணன் கூறியது: ஜெனரிக் மருந்துகளுக்கும், பிராண்டட் மருந்துகளுக்கும் தரத்தில் வேறுபாடு இல்லை. ஜெனரிக் மருந்துகளும் தரமானவையே. இம்மருந்துகள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து சிறந்த தயாரிப்பு முறைகளைக் கையாண்டதற்கான சான்று பெற்றுள்ளது. எனவே, தரம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
ஆனால் இந்த மருந்துகள் எல்லா கடைகளிலும் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் ஜெனரிக் மருந்துகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் இடைவெளி உள்ளது. ஜெனரிக் மருந்துகளை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்க மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள், மருந்துக்கடைக்காரர்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
தற்போது மருத்துவர்களில் சிலர் ஜெனரிக் மருந்துகளை எழுதத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவற்றையும் பிராண்டட் மருந்து விற்கும் கடைகளில் எம்.ஆர்.பி. விலைக்கே விற்கின்றனர். இதன்மூலம் அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, ஜெனரிக் மருந்துகளை எம்.ஆர்.பி. விலையிலிருந்து அதிகபட்சம் 60% வரை தள்ளுபடி வழங்கி விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை கடுமையாக்காமல் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றார் அவர்.
"கண்காணிப்பு தேவை'
நெல்லையில் பிரபல மருத்துவர் ஒருவர் கூறியது: ஜெனரிக் மருந்துகளுக்கும், பிராண்டட் மருந்துகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நோயாளியின் உடல் நிலை அறிந்து, அதற்கு ஏற்றவாறு தகுதியான, தரமான மருந்தை எழுதுவதற்கு, பல்வேறு அளவுகளில் பிராண்டட் பெயரில் மருந்துகள் இருப்பதால்தான் எளிதாக பரிந்துரைக்க முடிகிறது.
பிராண்டட் மருந்துகளை தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, தரத்தை அவர்கள் முறையாக பராமரிப்பார்கள். விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாவது மருந்தை தயாரிப்பார்கள். விலை குறைந்த மூலப்பொருள்களால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரம், சுகாதாரம் கேள்விக்குறியே.
ஜெனரிக் மருந்துகளே வேண்டாம் என்பதல்ல எங்கள் கருத்து. மருந்தின் தரத்தை உறுதி செய்ய அரசிடம் எந்தளவுக்கு கட்டமைப்பு வசதி உள்ளது என்பது குறித்து தெரியவில்லை. மருந்து உற்பத்தியில் கண்காணிப்பு கடுமையாக இருந்தால் இந்த பிரச்னை எழ வாய்ப்பில்லை.
அவ்வப்போது மருந்துக் கடைகளில் சேம்பிள் எடுத்துச் சென்று கண்காணிப்பு செய்து வந்தாலே, எல்லா மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தரமான மருந்துகளைத்தான் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்போது சிறிய நிறுவனங்கள் தரமற்ற மூலக்கூறுகளை பயன்படுத்த முடியாது. பெரிய நிறுவனங்கள் விளம்பரம், மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியும்.
மருந்துகளின் மூலக்கூறு பெயர்களைத்தான் பரிந்துரைக்க வேண்டும் என மருத்துவர்களை அரசு கட்டாயப்படுத்துவது சரியான முடிவாக இருக்காது. மாறாக இந்திய மருந்து நிறுவனங்கள் ஜெனரிக் பெயரில்தான் மருந்துகளை தயாரிக்க வேண்டும் என அரசு கடுமையான சட்டத்தை இயற்றலாம் என்றார் அவர்.
மருத்துவர்கள் அளிக்கும் மருந்துச்சீட்டில் "பிராண்ட்' பெயரை எளிதாக எழுதிவிடலாம். ஆனால் ஒரு மருந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் வரை கலந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக ஜெனரிக் மருந்துகளாகத்தான் எழுத வேண்டும் என நிர்பந்திக்கும்போது, மூலக்கூறுகள் அனைத்தையும் வரிசையாக எழுத வேண்டியதில் மிகுந்த சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...