தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, அதன் உரிமையாளரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. அண்ட் கோ குழுமம், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளையும், நூற்பாலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. இதில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை செய்யாத்துரையின் மகன் நாகராஜன் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்நிறுவனத்திலும், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 16-ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.
50 இடங்களில் சோதனை: சென்னையில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் வீடு உள்பட சுமார் 50 இடங்களில் சோதனை நடைபெற்றது. 6 நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில், ரூ.182.99 கோடி பணம் ரொக்கமாகவும், 101 கிலோ தங்கக் கட்டிகளும், 2 கிலோ தங்க நகைகளும் சிக்கின. மேலும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
6 மணி நேரம் விசாரணை: இச்சோதனை நிறைவடையும்போது, செய்யாத்துரை, அவரது மகன்கள், அவரது நிறுவனத்தின் நிர்வாகிகள், தொழில் கூட்டாளிகள் 15 பேருக்கு வருமான வரித்துறையின் சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் செய்யாத்துரையின் மகன் நாகராஜன் திங்கள்கிழமை பகல் 2.30 மணியளவில் ஆஜரானார்.
அவரிடம் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கேள்விகளைக் கொண்டு விசாரணை செய்தனர். இதில் நாகராஜன் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நாகராஜன் அளித்த பதில்கள், அங்கு பதிவு செய்யப்பட்டன.
பல கட்டங்களாக நடைபெற்ற இந்த விசாரணை, சுமார் 6 மணி நேரத்துக்கு பின்னர் நிறைவடைந்தது. விசாரணையின்போது கிடைத்த தகவல்களை வருமான தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த விசாரணைக்கு வரும் நாள்களில் அழைப்பாணை பெற்றிருக்கும் அனைவரும் ஆஜராவார்கள் என வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








