கிடப்பில் போடப்பட்ட மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகள்
கடந்த 8 மாதங்களில், 51 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை


கடந்த 8 மாதங்களில், 51 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இதுவரை ஒரு வழக்கில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
மனிதர்களின் அடிப்படை உரிமைகளான குடியுரிமை, அரசியல் உரிமை, வாழும் உரிமை, சுதந்திரம், கருத்துரிமை, பேச்சுரிமை, கல்வி உரிமை ஆகியவற்றைக் காக்கும் வகையில் மாநில அதிகாரத்தின்கீழ் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993, பிரிவு 21-இன்படி, கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரிவு 12-இன்படி, அதன் செயல்பாடுகள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அதே சமயத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு நிகரான அதிகாரத்துடனும் இதன் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி, மனித உரிமை மீறலில் ஈடுபடும் அரசு ஊழியர், மனித உரிமை மீறலைத் தூண்டும் அரசு ஊழியர், மனித உரிமை மீறலைத் தடுக்கத் தவறிய அரசு ஊழியர் ஆகியோர் மீது தாமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர் புகார் மூலமாகவோ அல்லது அவர் சார்பில் மற்றொருவர் தரும் புகார்களை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.
8 மாதங்களில் 51 வழக்குகளில் பரிந்துரை: தமிழகத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 107 புகார்கள் மீது விசாரணை நடைபெற்றுள்ளது. அதில், 51 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவும், சில வழக்குகளில் சம்பந்தபட்ட அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதில், ஒரு வழக்கில் மட்டுமே மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட 51 வழக்குகளில் பெரும்பாலானவை காவல் துறையினருக்கு அபராதம் விதிக்கப்பட்டவை ஆகும். மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத வழக்குகள் மீது அரசாணை பிறப்பிக்க உள்துறை கால தாமதப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தும் அதன் பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
நீதி கிடைத்தும் பயனில்லை: இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வட்டத்துக்கு உள்பட்ட வீறுவீடு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண்ணின் வழக்குரைஞர் ஸ்டாலின் மணி கூறியது: கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி பஞ்சவர்ணத்தின் கணவர் ஜெயபாண்டியை மின்கம்பி திருட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வீறுவீடு காவல் நிலையப் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரை அடித்து துன்புறுத்தினர். விசாரணையில், அவருக்கும் திருட்டுக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டு நாள்கள் கழித்து ஜெயபாண்டி வீட்டில் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2008-இல் வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் அபராதம், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பஞ்சவர்ணத்துக்கு மாற்றுத் திறனாளி மகனும், மகளும் உள்ளதால் அவரது நிலையைக் கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.
ஆனால், இந்தப் பரிந்துரை மீது அரசு எந்த விரைவான நடவடிக்கையும் எடுக்காததால், குற்றஞ்சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அன்றாடம் உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் பஞ்சவர்ணத்தால் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. காலம் கடந்து நீதி கிடைத்தும் எந்தப் பயனும் இல்லை. இனிவரும் காலங்களில் மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
கூடுதல் அதிகாரம் தேவை
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியது: மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை அரசு கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென்று சட்டம் கூறவில்லை. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறைவேற்ற முடியும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில் நிவாரணம் கோரும் புகார்தாரர் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.
சில வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியர் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுகின்றனர். அந்த தடை கோரிய வழக்குகள் முடிவு பெறும் வரை மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் 1993-ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றும் அதிகாரத்தை மனித உரிமை ஆணையத்துக்கே வழங்க வேண்டும். மேலும், மனித உரிமை ஆணைய பரிந்துரைகளுக்கு எதிராகப் போடப்படும் வழக்குகளை உயர்நீதிமன்றமும் உடனடியாக முடித்து வைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...