கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட 13 பேரின் பிணையும் நாமக்கல் நீதிமன்றம் ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி(பெண்), ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், கார் ஓட்டுநர் அருண் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜோதிமணி அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 14 பேரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விசாரணை நீதிமன்ற நீதிபதியான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.எச். இளவழகன் அழைப்பாணை அனுப்பியிருந்தார்.
அமுதரசு என்பவரை தவிர, 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்றுள்ளதால், அவரை தவிர்த்து 13 பேரின் பிணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாத அமுதரசு என்பவருக்கு நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
இதையடுத்து, பிடியாணை ரத்து செய்யப்பட்ட 12 பேரை போலீஸார் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
பிணை ரத்துக்கான காரணம்: 13 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற வட்டாரம் மற்றும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாகப் பேசினார்.
இதனால் நீதிமன்றத்தை அவர் அவமதித்ததாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிணையில் உள்ள 13 பேரின் பிணை உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டே வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும், விசாரணைக்கு ஆஜராவதில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இந்த நிலையில் தான் அனைவரின் பிணையையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





