

18 ஆண்டுகக்குப் பின்னராவது அமராவதி அணை நீர் பங்கீட்டின்படி உரிய நீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கரூர் மாவட்ட கடைமடை விவசாயிகள் உள்ளனர்.
கரூர், திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் அமராவதியும் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத் தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் இந்த ஆறு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி வழியாகப் பாய்ந்து கரூர் அருகே திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. இதன் துணை நதிகளாக சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியவை உள்ளன.
அமராவதி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியதால் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் அருகே ஆற்றின் குறுக்கே 1957-இல் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் 4 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில் அணை கட்டப்பட்டது.
வெள்ளக் கட்டுப்பாட்டிற்காகவும், வேளாண்மைக்காவும் மழை நீர் வீணாகாமலும் தடுக்க அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்த அணை கட்டப்படும்போதே அமராவதி நதியின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டத்துக்கு உரிய தண்ணீர் கொடுத்த பின்புதான், அணையின் புதிய ஆயக்கட்டுப் பகுதியான ஏஎம்சி (அமராவதி மெயின் சேனல்) பகுதிக்கு கொடுக்க வேண்டும் என 1957-இல் சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டத்திற்கு போதிய தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அணைச் சட்டத்தை மீறி புதிய ஆயக்கட்டு பகுதிக்கு மட்டும் அவ்வப்போது தண்ணீர் திறக்கப்பட்டு, கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
இதனால் கரூர் மாவட்டத்தின் அமராவதி பாசனப் பகுதிகள் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலாவது உரிய அளவில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் கரூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறியது:
அமராவதி அணையின் கிளை வாய்க்கால்களான பள்ளபாளையம் ராஜவாய்க்கால், சின்னதாராபுரம் வாய்க்கால், கொளிஞ்சிவாடி வாய்க்கால், திருமாநிலையூர் ராஜவாய்க்கால் போன்றவை மூலம் அமராவதி அணையின் கடைமடை பகுதிகளாக கரூர் மாவட்டத்தில் நேரடியாக சுமார் 30,000 ஏக்கர் நிலமும், மறைமுகமாக சுமார் 30,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன.
அணை கட்டப்படும்போது, பாசன வாய்க்கால் பகுதிகள் அனைத்தும் மானாவாரி நிலங்களாக இருந்தன. ஆனால் அணை கட்டப்பட்ட பின் அப்பகுதிக்கு, தற்போது அணையில் இருந்து ஆற்றின் மூலம் தண்ணீர் வழங்காமல் நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் அங்கு பாசனப் பரப்பளவு அதிகரித்துவிட்டது. மேலும் அணை நீர் பங்கீட்டுச் சட்டத்தின்படி அணையில் 40 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும்போது கடைமடைப் பகுதிக்கு முதலில் தண்ணீர் வழங்கிய பிறகே புதிய ஆயக்கட்டுப் பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் இந்த மரபு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது.
காரணம், 1996 முதல் கரூரில் உள்ள சாயப் பட்டறைகள் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் விட்டதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. முதன்முதலில் கருப்பம்பாளையத்தில் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளானது. பின்னர் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். 2015 வரை எங்களது போராட்டம் நடந்து, தற்போதுதான் முற்றிலும் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டங்களில் நாங்கள் அணையில் இருந்து தண்ணீரை எதிர்பார்க்காததால் திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் எங்களது தண்ணீரையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொண்டனர். இப்போது சாயக்கழிவு நீர் பிரச்னை நீங்கி அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்ய உள்ளோம். ஆனால் எங்களுக்குத் தண்ணீர் தர புதிய ஆயக்கட்டு விவசாயிகள் மறுக்கிறார்கள்.
1957-இல் காமராஜர் ஆட்சியில் போடப்பட்ட அணை நீர் பங்கீட்டு ஒப்பந்தமும் அவ்வப்போது மீறப்படுகிறது. இதனால் எப்படி காவிரி நீர் பிரச்னையில் காவிரி ஆணையம் மத்திய அரசு அமைத்துள்ளதோ, அதுபோல அமராவதி நீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் இருந்தபோது, திருச்சி மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டால் மட்டும் அமராவதி அணையில் தண்ணீர் திறக்க முடியும். ஆனால் இப்போது அங்குள்ள அமைச்சர் கூறினாலே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் முன்பு இருந்ததுபோல கரூர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டால்தான் அணை நீர் திறக்க முடியும் என்ற சட்ட முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
கடந்த 2016-இல் ஒத்தமாந்துறையில் கடும் போராட்டத்தை மேற்கொண்டதால், இரு முறை தண்ணீர் கிடைத்தது. கடந்தாண்டு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. நிகழாண்டிலாவது அணைநீர் பங்கீட்டின்படி உரிய தண்ணீர் வேண்டும். இதுதொடர்பாக கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். எங்களது உரிமை மறுக்கப்பட்டால் இந்த ஆண்டு கடும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.