கஜாவுக்கு பை பை: உருவாகிறது புதிய தாழ்வு நிலை; ரஜினி பட டைட்டில் போல அதற்கு ஒரு பெயர்!

கஜா புயல் தமிழகத்தை விட்டு நகர்ந்து கேரளாவுக்குச் சென்று இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது. 
கஜாவுக்கு பை பை: உருவாகிறது புதிய தாழ்வு நிலை; ரஜினி பட டைட்டில் போல அதற்கு ஒரு பெயர்!
Published on
Updated on
1 min read


கஜா புயல் தமிழகத்தை விட்டு நகர்ந்து கேரளாவுக்குச் சென்று இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது. 

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத்  தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது  மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11ம் தேதி உருவெடுத்தது. இப்புயல் நேற்று நள்ளிரவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

சென்னை மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கஜா புயல் எந்த வகையிலும் கைகொடுக்காத நிலையில், தற்பொழுதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் 18ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. இது 19ம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 20 மற்றும் 21ம்  தேதி தமிழகத்தை நெருங்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சரி  இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறினால் இதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று  தேடியதில் நமக்குக் கிடைத்திருக்கும் பெயர் பேத்தை.  (பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கும் ரஜினி பட டைட்டில்  'பேட்ட' இல்லைங்க). தாய்லாந்து நாட்டு சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பெயர்தான் பேத்தை. நம்மை கடந்து சென்ற கஜா புயல் என்ற பெயர் இலங்கை சார்பில் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வானிலை ஆய்வு மையம் கஜ என்று அழைத்தது.

பெயர் வைப்பது ஏன்?
புயல்களைப் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை எளிமையாக்கும் வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியக் கடற்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது. 

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகி, அதுபற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் புயல்களுக்கு தலா 8 பெயர்களை பரிந்துரை செய்வார்கள்.

ஒவ்வொரு புயல்களுக்கும் வரிசையாக ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயரை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வகையில் இலங்கை அளித்த கஜ புயலுக்கு அடுத்து தாய்லாந்து அளித்த பேத்தை என்ற பெயர் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை கஜா புயல் கைவிட்டாலும், நிச்சயம் பேத்தை உருவானால் சென்னைக்கு கைகொடுக்கும் என்றே நம்பப்படுகிறது. காத்திருப்போம் நம்பிக்கை மற்றும் குடையோடு!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com