நெல்லை முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை வழக்கு: திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் தலைமறைவு
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கார்த்திக்கேயனில் தாயாரும் திமுக பெண் பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகிவிட்டார்.


நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கார்த்திக்கேயனில் தாயாரும் திமுக பெண் பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகிவிட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் இருந்துவந்தார். இவர், தனது கணவர் முருகசங்கரனுடன் (72) திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மேலப்பாளையம் அமுதா பீட் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (40) இவர்களுடைய வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தார்.
கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இருந்த 3 பேரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், துணை ஆணையர்கள் சரவணன், மகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார், வீட்டின் அருகே உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்லிடப்பேசி உரையாடல் ஆகியவற்றைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதனடிப்படையில், திமுக பெண் பிரமுகரும், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருமான சீனியம்மாளின் மகன், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை (33) போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், 3 பேரையும் தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டாராம்.
இந்த நிலையில், கார்த்திகேயன் கொலைக்குப் பயன்படுத்திய 2 கத்திகளை பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை போலீஸார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, சாந்திநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டில் இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 21 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திகேயன் அழைத்துவரப்பட்டார். முதலில் வெளிநோயாளிகள் பிரிவுக்கும், பின்னர், ஸ்கேன் எடுக்கும் அறைக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை மருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்து உடற்தகுதி சான்றிதழ் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மகாராஜநகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள திருநெல்வேலி ஐந்தாவது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி வீட்டில் கார்த்திகேயன் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 14வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கார்த்திகேயன் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது ஆதாய கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்த நிலையில், கொலை நடந்த வீட்டில் இருந்து 2 தங்கச்சங்கிலி, 6 வளையல்கள், ஒரு தங்க கைக்கடிகாரம், ஒரு மோதிரம் என மொத்தம் 21 பவுன் நகைகள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதால், இது ஆதாய கொலையாக இருக்காது என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.
மேலும், உமாமகேஸ்வரி குடும்பத்தினருக்கு தெரிந்த நபரே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது உறுதியானது. வெளிப்புற சுவரில் ஓரிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விரல் ரேகையை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த ரேகையும், கார்த்திகேயனின் விரல் ரேகைகளும் ஒத்துப்போனதையடுத்து, தீவிர விசாரணையில் கார்த்திகேயன், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சீனியம்மாளும், உமாமகேஸ்வரியும் திமுகவில் ஒரே நிலையில் இருந்துள்ளனர். ஆனால், உமா மகேஸ்வரி மேயராகவும், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் வளர்ந்தார். அதேநேரத்தில், பல்வேறு காரணங்களால் சீனியம்மாளுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு உமா மகேஸ்வரியும் ஒரு காரணம் என கருதிய கார்த்திகேயன் கோபம் அடைந்துள்ளார்.
இதுதவிர பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாகவும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மன அழுத்தம் ஏற்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திகேயன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கின் முக்கியத்துவம் கருதி, சிபிசிஐடி விசாரணைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், உதவிக் கண்காணிப்பாளர் அனில்குமார், ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை விசாரணையை தொடங்கினர். கொலை நடந்த உமா மகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகையில், "மாநகர காவல் துறையினர் இவ்வழக்கு தொடர்பாக கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அடுத்த கட்டமாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு, இதர தடயங்கள் குறித்து ஆய்வு செய்து கொலையின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா அல்லது தனி ஒருவரால் மட்டுமே கொலை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றனர். இதனிடையே, கார்த்திகேயனின் தாயாரும், தி.மு.க. பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...