தமிழகத்தில் அந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்


சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன் கூறியதாவது, தென்மேற்கு பருவ மழை கேரளா, கர்நாடகா பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக இருக்கிறது. 

ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்கு பருவக் காற்று மிக வலுவான நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி நிற்கிறது.  இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மலைப் பகுதிகளில் மிகக் கன மழை தொடரும். 

தமிழகம் மற்றும் புதுவையில் இதரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பதிவாகும்.

கடந்த 24 மணி  நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்  91 செ.மீ. மழையும், மேல்பவானியில்  45 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான அறிவிப்பு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு தமிழகக் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை  மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பெய்திருக்கும் மழையின் அளவு 12 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழையின் இயல்பு அளவு 15 செ.மீ. இது 18 சதவீதம் குறைவு.

நீலகிரியில் 14 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெய்த மழையின் அளவு 632 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவு 552  செ.மீ. 

தேனியில் 68% இயல்பு அளவை விட அதிகமாகவும், நெல்லையில் 64% இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.

பொதுவாக ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மோதி நிற்பதால்தான் மலைப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்வது வழக்கம். ஆனால் இம்முறை, அதிக வலுவான காற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மோதுவதால் மழையின் அளவு அதிகமாக உள்ளது என்றும் பாலச்சந்திரன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com