கடந்த காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றத்தினால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. ஒரு முதலமைச்சர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதுதான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால், தமிழக முதலமைச்சர் அவர்களோ, ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கோ, உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்கோ, மத்திய அரசிடமிருந்து அதிக நிவாரண நிதி பெறுவதற்கோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதில்லை. தமிழக முதலமைச்சர், நரேந்திர மோடி அரசிடம் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை கேட்ட மொத்த நிவாரண தொகை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூபாய் 4200 கோடி. தமிழக அரசு கேட்டதற்கும், மத்திய அரசு வழங்கியதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. இதை எதிர்த்து பேசுகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இல்லை.