

திருச்சி: மேட்டூர் - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமானது 1994-இல் வடிவமைக்கப்பட்ட நடைமுறைப்படி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என திருச்சி, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர்.
இத் திட்டத்தில் ஒரு பகுதியாக முதல்வர் தொகுதியான எடப்பாடி பகுதியில் உள்ள 100 ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் பணிகளைத் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பது திருச்சி, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திட்டம் ஏன்?: காவிரியாற்றின் குறுக்கே 1934-இல் மேட்டூர் அணை கட்டப்பட்ட நாளில் இருந்து இத்திட்டத்துக்கான அவசியம் குறித்த எண்ணம் விவசாயிகளிடையே உருவானது. குறிப்பாக நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் வறட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தேவைக்கும், பாசனத்துக்கும் காவிரித் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1950-ஆம் ஆண்டு திருச்செங்கோட்டைச் சேர்ந்த அப்போதைய எம்பி டி.எம். காளியண்ணன் இத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரினார். நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப் பேரவையிலும் உறுப்பினராக இருந்த அவர், இத் திட்டத்தைச் செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ரூ.390 கோடி மதிப்பீடு: இத் திட்டம் தொடர்பாக விவசாயிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி அரசின் ஒப்புதலுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது. இதன்படி, மேட்டூர் அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் வந்த பிறகு உபரி நீரை கால்வாய் மூலம் இணைப்பதே இத் திட்டத்தின் அடிப்படையாக இருந்தது. இதற்காக 182 கி.மீ. கால்வாய் வெட்ட முடிவு செய்யப்பட்டது.
காவிரி (மேட்டூர்)-சரபங்கா-திருமணிமுத்தாறு ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தக் கால்வாய் வெட்டப்பட வேண்டும். மேட்டூர் அணையில் தொடங்கும் கால்வாயானது சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகியவற்றை இணைத்து திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகிலுள்ள கீரம்பூரில் முடிவடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதன்மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்கள் பயன்பெறும். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 16,900 ஏக்கரும், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் 15,523 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஆனால், திட்டம் கிடப்பிலேயே இருந்தது.
ஆளுநர் உரை: 2010-11-ஆம் ஆண்டுக்கான தமிழக ஆளுநர் உரையில் இத் திட்டம் மீண்டும் இடம்பெற்றது.
2013-இல் தமிழக அரசு அறிவித்த நதிகள் சீரமைப்புத் திட்டங்களிலும் 3-ஆவது திட்டமாக இத் திட்டம் இடம்பெற்றது. இதன்பிறகும் கால்வாய் வெட்டுவதற்கான பணிகள் தொடங்காததால் விவசாயிகள் போர்க்குரல் எழுப்பத் தொடங்கினர். அரசியல் கட்சிகளின் சார்பிலும் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
ரூ.1,134 கோடி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு ரூ.1,134 கோடியில் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 2 டிஎம்சி தண்ணீரை சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு திருப்ப ஆவன செய்யப்படும் எனவும் அறிவித்தார். இதன் பிறகு 6 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மேட்டூர் உபரிநீரை முதல்வரின் எடப்பாடி தொகுதியில் அமைந்துள்ள குளங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் வெட்ட ரூ. 525 கோடியை தமிழக அரசு கடந்த மாதம் (நவம்பர்) ஒதுக்கியுள்ளது.
இதன்படி, எடப்பாடி பகுதியில் 33 ஏரி, குளங்களுக்கும், எம். காளிப்பட்டி பகுதியில் 67 ஏரி, குளங்களுக்கும் மேட்டூர் உபரி தண்ணீர் (0.5 டிஎம்சி) கொண்டு செல்லப்படவுள்ளது.
இதற்காக 241.05 ஏக்கர் தேவைப்படுகிறது. நிலம் எடுப்பதற்காக ரூ.35 கோடியை சேலம் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்து பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தால் பயன்பெறும் திருச்சி மாவட்டத்தின் கடைசிப் பகுதியான துறையூர் வட்டத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ந. கணேசன் கூறியது:
1950-ஆம் ஆண்டு இத் திட்டம் உருவானபோதும், 1994-இல் அரசு திட்டவரைவு தாக்கல் செய்தபோதும் 182 கி.மீ. கால்வாய் வெட்டுவதே பணியாகும். இப்போதும், 142 கி.மீ. தொலைவுக்கான கால்வாய் வெட்டுவதை சேலம் மாவட்ட பொதுப்பணித் துறையும், 40 கி.மீ. தொலைவுக்கான கால்வாயை திருச்சி மாவட்ட பொதுப் பணித் துறையும் மேற்கொள்ளும் வகையிலேயே திட்ட வரைவு உள்ளது.
ஆனால், முதல்வர் தொகுதி என்பதற்காக திட்டத்தைச் சுருக்கி அதிரடியாக பணிகளைத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி தொகுதியோடு திட்டம் நின்றுவிட கூடாது. திட்டமிட்டபடி திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்துக்குள்பட்ட கீரம்பூர் ஏரியில் கொண்டு வந்து இணைத்தாலே திட்டம் முழுமை பெறும். எனவே, திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், விவசாயிகளும் இத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை தரப்பில் கூறியது: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தின் முதல் பகுதியான 142 கி.மீ. சேலம் மாவட்டத்துக்குள் வருகிறது. இரண்டாவது பகுதியான 40 கி.மீ. திட்டம் மட்டுமே திருச்சி மாவட்டத்துக்குள் வருகிறது.
இந்தப் பகுதியில் களப்பணிகள் முடிந்து குறுக்கு வடிகால் பணிகளுக்காக கருத்துரு தயாரிக்கப்பட்டு சென்னையில் உள்ள,வடிவமைப்பு வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வடிவமைப்பு ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்கின்றனர். எதுவாக இருந்தாலும் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.