
சென்னை: நடைபெற்று வரும் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பணியிடை நீக்கம், கைது நடவடிக்கைகள் தீர்வாகாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, ஒன்றுபட்ட முறையில் கடந்த 22ம் தேதி முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை திடீர் என மேற்கொள்ளவில்லை. மாறாக கடந்த இரண்டாண்டு காலமாக தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. அத்தகைய கடமையை அரசு செய்ய தவறியதால், தங்களுக்கு வேறுவழியின்றி கடைசி ஆயுதமான வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன் விளைவாக நிர்வாகம் முற்றிலும் முடங்கி, அரசின் அனைத்து துறைகளும் செயல்படாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ள சூழலில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்நிலை நீடித்து வருவது மிகவும் கவலைக்குரியது.
கௌரவப் பிரச்சனையாக அரசு கருதி, பணியிடை நீக்கம் செய்வது, கைது செய்து சிறையில் அடைப்பது, ஊதியம் பிடித்தம் செய்வது, பணியில் இருந்து நீக்குவது, காலிப்பணியிடங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமனம் செய்வது போன்ற நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப் படுவதால் எவ்வித நற்பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மட்டுமின்றி போராட்டம் மேலும் தீவிரமடைய வழிவகுக்கும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
பழிவாங்கல், அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட்டு ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளை, மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.