தமிழகத்தில் உள்ள 6 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மொத்தம் 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றியமைத்து, தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படைக்கலத் தொழிற்சாலைகள் இந்திய ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும், போர் வாகனங்கள், கனரக பீரங்கிகள், இலகு ரக- நடுத்தரத் துப்பாக்கிகள், வெடி பொருட்கள், பாராசூட் மற்றும் சிப்பாய்களுக்கான படை உடைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட தரத்துடன் தொடர்ந்து தயாரித்து வழங்கி, சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. 41 படைக்கலத் தொழிற்சாலைகளிலும், 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதோடு, அவை 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் உபகரணங்களையும் உடைகளையும் உற்பத்தி செய்கின்றன.