பணம், தங்கம் பறிமுதல்: முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? துரைமுருகன் விடுக்கும் சவால்

தனக்கு சொந்தமான வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் குறித்து முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
பணம், தங்கம் பறிமுதல்: முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? துரைமுருகன் விடுக்கும் சவால்


சென்னை: தனக்கு சொந்தமான வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் குறித்து முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, என்னைப் பற்றி பேசுகையில், புளுகு மூட்டைகளை கொட்டியுள்ளார். அதை, நாளிதழ்கள் மூலம் பார்த்தபோது, அவரை நினைத்து பரிதாபப்படுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

"இவருக்கு (அதாவது எனக்கு) சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை கைப்பற்றியது. அவருக்கு எந்த வகையில் வந்த பணம் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பழனிசாமி பேசியிருந்தார்.

முதல்வர் இந்த அளவுக்கு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

1. எங்களுடைய வீடு, கல்லூரியில் நடத்திய சோதனையின் போது ரூ.10 லட்ச ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அவர் கூற்றுப்படி ரூ.13 கோடி அல்ல. அவ்வாறு ரூ.13 கோடி எடுத்த இடம் எங்களுடையது  அல்ல.

2. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த சோதனையில் தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. 

இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.

அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ஒரு இடத்தில் இருக்கும் முதல்வரே ஏதும் தெரியாத மனிதனைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும்.

கடைசியாக அவருக்கு ஒரு சவால்..

எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் என் பதவியை விட்டு விலகுகிறேன். இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி தனது பதவியில் இருந்து விலகத் தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com