இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தோல்வியைக் காட்டிலும் வெற்றியை பாதுகாப்பது மிகவும் கடினம்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியை கைப்பற்றியதன் மூலம் முதல் வெற்றியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பதிவு செய்துள்ளது.

News image
Updated On :26 மே 2019, 8:23 am IST

மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியை கைப்பற்றியதன் மூலம் முதல் வெற்றியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பதிவு செய்துள்ளது.

தோல்விக்கு பின் திட்டமிடுதலைக் காட்டிலும், வெற்றிக்கு பின் அதைப் பாதுகாக்கத் திட்டமிடுதல் மிகவும் கடினம் என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன். கடந்த 2009 - ஆம் ஆண்டு, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற பெயரில்,  பெஸ்ட் ராமசாமி,  ஈஸ்வரன், தேவராஜன் ஆகியோர் ஒருங்கிணைந்து புதிய கட்சியைத் தொடங்கினர். அப்போது  நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில்  தேவராஜனும், கோவை தொகுதியில் ஈஸ்வரனும் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.

2011- இல் அக்கட்சியில் இருந்து பெஸ்ட் ராமசாமி வெளியேறினார். அதன்பின் கட்சி ரீதியாக பிரச்னைகளை சந்தித்த கொங்குநாடு முன்னேற்றக் கழகம், 2013-இல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியாக மாறியது. 2014 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த இக்கட்சிக்கு, பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில்,  அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் கூட்டணியில் இருந்து கொ.ம.தே.க. வெளியேறி 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த கொ.ம.தே.க., அதன்பின் தி.மு.க.வுடன் கைகோர்த்தது. 2016 ஆம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே இடங்கள் பங்கீடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் கொ.ம.தே.க. அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் எப்படியும் நாமக்கல் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பிப்ரவரி மாதம் உலக கொங்கு தமிழர் மாநாட்டை அக்கட்சி தலைமை நடத்தி தங்களது பலத்தைக் காட்டியது.

அதன் எதிரொலியாக தி.மு.க.வும், ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த நாமக்கல் மக்களவைத் தொகுதியை,  அக்கட்சிக்கு தாரை வார்த்தது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தபோதும், தனி சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அக்கட்சியின் உயர்மட்டக்குழு,  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்வோம், அதன்பின் வரும் தேர்தல்களில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை,  உதயசூரியன் சின்னம், கொங்கு மக்கள் சார்ந்த தொகுதி மற்றும் கொ.ம.தே.க.வினரின் தீவிர பிரசாரம் உள்ளிட்டவை, அக்கட்சி வேட்பாளரான ஏ.கே.பி.சின்ராஜை 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தது.

மக்களவைத் தேர்தல் வெற்றியை கொண்டு, அடுத்து வரும் தேர்தல்களிலும்  தங்களது பலத்த காட்ட வேண்டும் என்ற முனைப்போடு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியது: சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பேரணி நடத்துகிறோம்.  அதனைத் தொடர்ந்து, எங்களுடைய  உயர்மட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. பிரசாரத்தின்போது எவ்வாறு கிராமம், கிராமமாக சென்றோமோ,  அதுபோல் ஏ.கே.பி.சின்ராஜ் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து நன்றி கூறுகிறார்.

தோல்விக்கு பின் திட்டமிடுவதைக் காட்டிலும்,  வெற்றிக்கு பின், அதைப் பாதுகாக்க திட்டமிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அடுத்து வரும் தேர்தல்களிலும், கொ.ம.தே.க. தொண்டர்களின் உழைப்பு தொடரும். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தில்லியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமித்து தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்போம்.  மக்களோடு இணைந்தே இனி எங்களது பணி இருக்கும். வரும் தேர்தல்களிலும் கொ.ம.தே.க.வின் வெற்றி தொடரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.