95 ஆண்டுகளுக்குப் பிறகு வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.
கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி.


நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வடரெங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் 95 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
வடரெங்கத்தில் ரெங்கநாதப் பெருமாள் கோயில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள இந்த ரெங்கநாத பெருமாள் கோயில் மண்டபம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாத பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணாமியன்று தீர்த்தவாரி நடைபெற்று வருவது வழக்கம். 
இந்நிலையில், கடந்த 1924-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, அப்பகுதியிலிருந்த கோயிலின் பெரும்பகுதியும் குடியிருப்புகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும் கோபுரம் மட்டும் கம்பீரமாக இன்னும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 
இந்த கோபுரத்துக்குள் வசிஸ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிருஷ்ணன் சிலை தற்போதும் உள்ளது. 1924-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த கோபுரம் பூட்டப்பட்டது. இந்நிலையில், ரெங்கநாதர் கோயில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இருப்பினும், இக்கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி விழா மட்டும் தடைபட்டிருந்தது. இந்நிலையில், 95 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வடரெங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையால் வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது. 
விழாவையொட்டி, காலை மூலவர் மற்றும் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் ரெங்கநாதப் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 
இதில், கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும், மாலையில் ரெங்கநாதப் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  95 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணி பௌர்ணமி விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரியால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com