பாரம்பரியத்துடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்: ஆளுநர் வலியுறுத்தல்

நமது பாரம்பரியத்துடன் கூடிய அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். அதுதான் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
உலக பொறியாளர் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் மார்லென் கங்காவுக்கு சாதனையாளர் விருது வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
உலக பொறியாளர் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் மார்லென் கங்காவுக்கு சாதனையாளர் விருது வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 


நமது பாரம்பரியத்துடன் கூடிய அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். அதுதான் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் நிறுவனம் நூற்றாண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. 
அதன் தொடக்க நிகழ்ச்சியாக சென்னையில் வெள்ளிக்கிழமை பொறியியல் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்பமும், புதிய கண்டுபிடிப்புகளும் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சவால்களைச் சமாளிக்க நாம் அனைத்துத் துறைகளில் மேம்படுவது அவசியமாகிறது. மாறி வரும் சூழல்களுக்கு ஏற்ப, நமது பொறியாளர்களும் திறன்களை தொடர்ச்சியாக மேம்படுத்தி வரவேண்டும். 
ஏனெனில் சமூகத்தில் ஒரு பொறியாளரின் பங்களிப்பு மிக அவசியமானது. பாலங்கள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதும், பராமரிப்பதும் பொறியாளர்கள்தான். இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இந்திய பொறியாளர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்), வங்கி மேலாளர் பணிகளுக்கும் பொறியாளர்கள் இப்போது வருகின்றனர்.
அதே நேரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பாடத் திட்டத்தை மாற்றுதல், ஆன்-லைன் கற்றல் முறைகளை அறிமுகம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.
அதுபோல, கல்வி நிறுவனங்களுக்கும், பொறியியல் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இன்ஸ்டிடியூஷன்  ஆப் இன்ஜினியர்ஸ் நிறுவனம் பாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக தொழில்நிறுவனங்களின் தேவைக்கேற்ப பொறியியல் பாடத்திட்டங்களை உருவாக்குவதில் பங்களிப்பை அளிப்பது, பொறியியல் கருத்தரங்குகள், குழு விவாதங்கள், பயிலரங்குகளை நடத்துவது என இந்த  நிறுவனம் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. இது பாராட்டுக்குரியது. 
அதே நேரம், இதுபோன்ற பங்களிப்புகளை மேற்கொள்ளும்போது, பல நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் பாரம்பரியத்தைப் பின்பற்ற தவறிவிடக்கூடாது. ஏனெனில் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு, இந்தியாவின் அந்தப் பாரம்பரியம்தான் வழிவகுக்கும். ஆன்மிகம் சார்ந்த அந்த பாரம்பரியம்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை நாகரிகத்திலும், அறிவியல், கலை, கலாசாரத்தில் மேம்பட வைத்தது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஏஐசிடிஇ தலைவர் சஹஸ்ரபுத்தே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, தேசத்திற்கு ஒரு நூற்றாண்டு சேவை என்ற நூலையும், நூற்றாண்டு கொண்டாட்ட சிறப்பு மலரையும் ஆளுநர் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com