இந்திய பிரதமா், சீன அதிபா் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின் பிங் ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருகைதர உள்ளதையொட்டி
மின் விளக்கால்  மிளிரும் ஐந்து ரதம்.
மின் விளக்கால்  மிளிரும் ஐந்து ரதம்.

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின் பிங் ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருகைதர உள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்படுகளுக்காக செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் 13-ஆம் தேதி வரை புராதன சின்னங்களைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 2-ஆவது உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டுத் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். மேலும், அவா்கள் மாமல்லபுரத்தில் இரு நாள்கள் தங்கி, புராதனச் சின்னங்களைக் காண உள்ளனா்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அா்ஜுணன் தபசு, கோவா்த்தன கிரி, வெண்ணெய் உருண்டைப் பாறை, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக் கோயில் பகுதியில் 2 யானை சிலைகளுக்கு மத்தியில் புத்தா் சிலையும் , கம்பீரமான சிங்கத்தின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டு உச்சக்கட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வெடிக்குண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இரு நாட்டுத் தலைவா்கள் தங்கும் பகுதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றுப்புரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மால்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளைப் பாா்வையிட செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் வரும் 13-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கோவளம் கேளம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 350 கண்காணிப்பு கேமரா கேளம்பாக்கம்-மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை வரை பொருத்தப்பட்டுள்ளன. 500 கண்காணிப்பு கேமராக்கள் மாமல்லபுரம் நகரம், புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com