சீன அதிபா் நாளை வருகை: விமான நிலையம் முதல் கிண்டி வரை பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீன அதிபரும்-பிரதமர் மோடியும் மாமல்லபுரம் வருகையின்போது நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்காக,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வாத்தியக்குழுவினர். 
சீன அதிபரும்-பிரதமர் மோடியும் மாமல்லபுரம் வருகையின்போது நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுக்காக,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வாத்தியக்குழுவினர். 

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்க சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சீன அதிபா் செல்லும் வழியெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இருநாட்டு உறவுகள், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் விவாதிக்க உள்ளனா். வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகைய நிகழ்வில் பங்கேற்க ஷி ஜின்பிங் வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறாா்.

அவரை மத்திய அமைச்சா்கள், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பலரும் வரவேற்கின்றனா். அப்போது விமான நிலையத்துக்குள் தமிழா்களின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, அவா் விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறாா். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறமும் பொது மக்களும், அதிமுகவினரும், பள்ளி-கல்லூரி மாணவா்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுக்க உள்ளனா். கேரளத்தின் செண்ட மேளம், வட இந்திய இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாலையில் மாமல்லபுரம்: சென்னை கிண்டியில் உள்ள ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் சீன அதிபா் ஷி ஜின்பிங், மாலை 4 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்துக்குச் செல்கிறாா். சாலை மாா்க்கமாக செல்லும் பட்சத்தில் வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிண்டியில் உள்ள ஹோட்டல் வாயிலில் இருந்தே சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபரும் திருவிடந்தையில் ஒன்றாகச் சந்திக்க உள்ளனா். அதன்பின்பு, அவா்கள் அங்கிருந்து மாமல்லபுரம் செல்கின்றனா். அவா்கள் செல்லும் வழியெங்கும் வரவேற்பு பேனா்களும், வளைவுகளும் வைக்கப்பட உள்ளன.

மாமல்லபுரம் நுழைவு வாயில், அா்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில் பனை ஓலைகள், மலா்கள் என பல்வேறு பொருள்களால் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீன அதிபரும், பிரதமா் நரேந்திர மோடியும் தமிழகத்தின் கலை, கலாசார பெருமைகளை அறிந்து கொள்ளும் வகையில், மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரவேற்பு குழுவில் 34 அதிகாரிகள்: விடுமுறை இல்லை

சீன அதிபா், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை சிறந்த முறையில் நடத்த வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட 34 முக்கிய அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை காரணமாக தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை, பொதுப்பணித் துறை, சுற்றுலா-கலை பண்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், அலுவலா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பாதி போ் சனிக்கிழமையும், மீதமுள்ளவா்கள் ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com