பெற்றோருக்கு தலா ரூ.1,000 நிவாரணம்: அரசுப் பள்ளி ஆசிரியைகளின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி

கொடுமுடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவர் தங்களது பள்ளியில் படித்துவரும் மாணவ,
பெற்றோருக்கு தலா ரூ.1,000 நிவாரணம்: அரசுப் பள்ளி ஆசிரியைகளின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
Updated on
1 min read

ஈரோடு: கொடுமுடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவர் தங்களது பள்ளியில் படித்துவரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தங்களது சொந்த பணத்திலிருந்து தலா ரூ.1,000 நிவாரணம் அளித்திருப்பது கிராம மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி-கரூர் சாலையில் நொய்யல் சோதனைச்சாவடி அருகே உள்ள மிகச்சிறிய கிராமம் சிட்டப்புள்ளாம்பாளையம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் கடந்த தலைமை ஆசிரியை உமாதேவி, உதவி ஆசிரியை லீலாவதி. இங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மொத்தம் 33 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வேலையிழந்து குடும்பத்தின் அடிப்படைத் தேவைக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தலைமை ஆசிரியை உமாதேவி தனது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் விதமாக தனது உதவி ஆசிரியை லீலாவதியுடன் சேர்ந்து தற்போது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 33 மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கும், வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர உள்ள 3 குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் சேர்த்து தங்களது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1,000 வீதம் வீடு தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை உமாதேவி கூறியதாவது: 

இந்தப் பள்ளியில் கடந்த 18 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக இருக்கிறேன். ஆசிரியர் பணிக்கு 30 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இந்தப் பள்ளிக்கு சிட்டப்புள்ளாம்பாளையம், பெரியவட்டம், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர். நான் பெரியவட்டம் கிராமத்தில் தான் குடியிருக்கிறேன். பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் என் வீடு உள்ளது. 

இங்குப் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர்கள் கிணறு வெட்டும் தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத்திற்கும் மேலாகக் குழந்தைகளின் பெற்றோர் வேலையில்லாமல் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் உள்ளது. இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி ஆசிரியை லீலாவதியுடன் இணைந்து எங்களது சொந்தப் பணத்தில் தலா ரூ.1,000 வீதம் 36 குடும்பங்களுக்குக் கொடுத்துள்ளோம். இந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

எங்களிடம் படிக்கும் குழந்தைகள், எங்கள் குழந்தைகள் போல் தான். எங்கள் குழந்தைகள் பசியால் வாடினால் மனது எந்த அளவுக்குப் பதைபதைக்குமோ, அதே மனநிலை தான் எங்களிடம் படிக்கும் குழந்தைகள் மீதும் உள்ளது. அதனால் தான் முடிந்த உதவியை செய்தோம், இனியும் செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com