சென்னையில் கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் சிக்கல்கள்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
சென்னையில் கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் சிக்கல்கள்
சென்னையில் கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் சிக்கல்கள்


சென்னை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

டிசம்பர் 7-ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், சென்னையில் உள்ள ஏராளமான கல்வி நிலையங்கள், கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றியிருக்கும் நிலையில், அவற்றை தூய்மைப்படுத்தி, மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம், கல்லூரிகளை திறக்க வெறும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் இன்னமும் 50 கல்லூரிகள், அதன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த திங்களன்று பிறப்பித்த உத்தரவில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல கல்லூரிகள் தற்போதும் கரோனா நோயாளிகள் தங்குமிடங்களாக வைக்கப்பட்டுள்ளன. அவை இதுவரை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. தற்போது புதிதாக வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், கல்லூரிகளை சுத்தப்படுத்தி ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சியைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் சில கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அவ்வளவு ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் கூட திங்கள்கிழமை நிலவரப்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தாமலேயேதான் காணப்பட்டது. ஆனால், மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்னமேயே, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிடும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகள் திறக்கப்பட உத்தரவிடப்பட்ட பின்னர், கரோனா மையங்களாக மாற்றப்பட்ட கல்லூரிகளில் புதிய நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

பல அரசுக் கல்லூரிகள் தங்களது மாணவ விடுதிகளை கரோனா மையங்களாகப் பயன்படுத்த அரசுக்குக் கொடுத்திருந்தன. ஆனால் பல விடுதிகள் இன்னமும் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கல்லூரிகளை சுத்தப்படுத்தும் பணிகள் குறித்த அச்சத்தால், கல்லூரிக்கு வர மாணவ, மாணவிகள் அச்சப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ஏராளமான கல்லூரி, மாணவ, மாணவிகள் பயணிகள் ரயிலையே தங்களது போக்குவரத்துக்கு முழுதும் நம்பியுள்ளனர். சென்னையில் இன்னமும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்காததால், அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் பேருந்துகளிலேயே பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். பேருந்து வசதி இல்லாத அல்லது வெகு தொலைவிலிருந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வர முடியாமல் போகலாம். 

பயணிகள் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவது மற்றும், கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதும் கல்லூரிகளைத் திறக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும்.

மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை திறப்பது என்பது வரவேற்கத்தக்க முடிவுதான் என்றாலும், இதர மாணவர்களுக்கு கல்லூரிகளை திறப்பது என்பது நிச்சயம் உடனடியாக சாத்தியப்படாது. நான்கில் ஒரு பங்கு மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கும்போது மட்டுமே சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியம் என்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com