தமிழ் செம்மொழி ஆய்வினை மேலும் செழுமைப்படுத்துவதற்கு தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தை தொடர்ந்து பாஜக அரசு சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கான இயக்குநரை நியமிக்காமல் நீண்ட காலம் காலியாக வைத்திருந்தது, தமிழ் தெரியாதவர்களை இயக்குநர்களாக நியமிப்பது, இந்நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாமதப்படுத்துவது போன்றவைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தையே ஒழித்துக்கட்டி மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பி.பி.வி. பல்கலைக்கழகமாக மாற்றி, அதோடு தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தனித் தன்மையை இழந்து பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மாற்றப்படும் ஆபத்து ஏற்படும்.