ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற விழாவை தொடங்கிவைக்கும் முதல்வர் பழனிசாமி
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற விழாவை தொடங்கிவைக்கும் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் ரூ. 24,458 கோடி முதலீட்டில் 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலமாக 54,218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை எம்.சி.ஆர். நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்ற விழாவில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய அரசு வெளியிட்ட “நல் ஆளுமைக் குறியீட்டில்” இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. “இந்தியா டுடே” பத்திரிக்கையினால், ஒட்டு மொத்த செயல்பாடுகளில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

மின்னாளுமை கொள்கை, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவான உறுதிகளை வழங்கி முதலீட்டுக்கு வழிவகுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகன உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி தளவாடங்கள் தயாரித்தல், மின்னணு பொருட்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி, வானுர்தி பாகங்கள் உற்பத்தி என பலதுறைகளைச் சார்ந்த 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், ஒரு திட்டம் துவங்கப்பட்டும் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 24,458 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 54,218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பி வரும் மாநிலமாக, நவீன உலகிற்கான உற்பத்தி மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை இன்றைய நிகழ்வில் கண்கூடாக நாம் காணமுடிகிறது. வாகன உற்பத்தி, துணி நூல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, பொறியியல் இயந்திரங்கள் உற்பத்தி, காற்றாலை உபகரணங்கள் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் பெயர்பெற்ற தமிழ்நாடு, தற்போது வளர்ந்துவரும் துறைகளான சூரிய மின்சக்தி தளவாடங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கான புதிய மையமாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அமெரிக்க நாட்டின் First solar நிறுவனம் மேற்கொள்ளும் 4,185 கோடி ரூபாய் முதலீடு, ஓசூரில் மின் இருசக்கர வாகனம் உற்பத்தியில் ola motor நிறுவனம் மேற்கொள்ளும் 2,354 கோடி ரூபாய் முதலீடு, crown குழுமத்தின் வானூர்தி பாகங்கள் உற்பத்தியில் மேற்கொள்ளும் 2,500 கோடி ரூபாய் முதலீடு ஆகியன இதையே உணர்த்துகின்றன. இது தவிர, Mylon Pharma உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மருந்து உற்பத்தித் துறையிலும் தமிழ்நாட்டின் சிறப்பான செயல்பாடுகளை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் “புதிய தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தொழில் துறையினரிடம் தொடர்ந்து இருந்து வருவதற்கு மற்றுமொரு சான்றாக இன்றைய சிறப்புமிக்க நிகழ்வு அமைந்துள்ளது.

தங்கள் முதலீட்டுக்கான சரியான தேர்வாகத் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்த அனைத்து தொழில் முனைவோருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர்ந்து நல் ஆதரவை வழங்கிவரும் வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும், தொழில் அமைப்புகளுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com