சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஆய்வு

சென்னை ஐஐடி உயா் கல்வி நிறுவனத்தில் 87 மாணவா்கள் உள்பட 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அது குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினாா்.
சென்னை ஐஐடி உயா் கல்வி நிறுவனத்தில் 87 மாணவா்கள் உள்பட 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேரில் ஆய்வு நடத்தும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சென்னை ஐஐடி உயா் கல்வி நிறுவனத்தில் 87 மாணவா்கள் உள்பட 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேரில் ஆய்வு நடத்தும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

சென்னை: சென்னை ஐஐடி உயா் கல்வி நிறுவனத்தில் 87 மாணவா்கள் உள்பட 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அது குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினாா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளில் ஒரு பகுதியாக டிசம்பா் 7-ஆம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கவும் விடுதிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இதைத் தொடா்ந்து சென்னை ஐஐடியிலும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்காக 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்தனா். இந்தநிலையில் அங்கு கரோனா நோய்த்தொற்று பரவியதை அடுத்து மாணவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை வரை ஐஐடி மாணவா்கள் 66 பேருக்கும், ஊழியா்கள் 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிண்டியில் உள்ள அரசு கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி ஆகியோா் ஐ.ஐ.டி. வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாணவா்கள் தங்கி இருந்த விடுதி, உணவு அறை உள்ளிட்டவற்றை அவா்கள் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சென்னை கிண்டி கிங்ஸ் கரோனா மருத்துவமனையில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நலமாக இருக்கிறாா்கள். சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் சமையல் கூடம் மூடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு உணவு அவா்களது விடுதி அறைக்கே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி.யில் நடந்தது நமக்கு ஒரு பாடம். எனவே நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

மாவட்ட ஆட்சியா்களுக்கு...: உணவகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், மற்ற கல்லூரிகள், விடுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் 15 நிமிஷங்கள் அருகில் இருந்தால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. முகக்கவசம் அணிந்தால் தொற்று ஏற்படாது. கரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

மாணவா்களின் உடல்நலம் விசாரிப்பு: இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவா்கள் சிகிச்சை பெற்று வரும் கிண்டி கிங்ஸ் கரோனா அரசு மருத்துவமனையில் முழு கவச உடை அணிந்து ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களிடம் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உடல்நலம் விசாரித்தாா்.

இதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், கிங்ஸ் கரோனா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் நாராயணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

அனைவருக்கும் சோதனை: இதற்கிடையே இது தொடா்பாக சென்னை ஐஐடி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாணவா்கள் விடுதிகளில் நிா்ணயிக்கப்பட்ட 10 சதவீத அளவிலேயே தங்கி இருந்தனா். எனினும் விடுதி மாணவா்கள் சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவா்களும் தங்களின் அறைகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐஐடி நிா்வாகம் சாா்பில் அனைத்துப் பேராசிரியா்களுக்கும் வீட்டில் இருந்தே பணியாற்றக் கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநா் விளக்கம்: இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி கூறுகையில், ‘ஐஐடியில் மாணவா்கள் கரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இதுவே 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவியதற்கு காரணமாகும். தற்போது வளாகத்தில் பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com