மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

லதா ரஜினிகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் காலி செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
லதா ரஜினிகாந்த்
Updated On :16 டிசம்பர் 2020, 8:17 am

DIN

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம், காலி செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள கல்விச் சங்கத்தை எச்சரித்துள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாரான லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்துக்கு வாடகை தொடர்பாக  பிரச்னை இருந்து வந்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை பாக்கியான ரூ.1 கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இடத்தின் உரிமையாளர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி திடீரென்று பள்ளியின் வாயிலை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்பின்னரும் வாடகைப் பிரச்னை நீடித்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு 2020-ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியாததால், மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்த் தரப்பில், இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மாத வாடகையாக டிடிஎஸ் தொகை உள்பட ரூ. 8 லட்ச முறையாக செலுத்தப்படுகிறது. எனவே காலி செய்வதற்கான கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த பிறப்பித்த உத்தரவில், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலி செய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். இடத்தை காலி செய்ய தவறும் பட்சத்தில், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் வரும் 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும்  ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.