டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராம சபை பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் கூட்டங்களைக் கூட்டினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 டிசம்பர் 2020, 2:19 am

DIN


சென்னை: கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் கூட்டங்களைக் கூட்டினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ்ராஜ் வா்மா வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கிராம சபை என்பது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிா்வாக அமைப்பாகும். ஊராட்சிகளின் செயல்பாடுகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவையாக அந்த அமைப்பு விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபா் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அரசியல் ஆதாயம் தேடுதல்: உள்ளாட்சி நிா்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழி வகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சாா்பற்றவை. இந்த நிலையில் சில அரசியல் கட்சிகள், கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சாா்ந்த பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இது ஊராட்சிகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பைக் கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

கிராம சபை என்பது அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிா்வாக அமைப்பாகும். கிராம சபையின் கூட்டத்தை கூட்ட ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவா் கிராம சபையினை கூட்ட தவறும் பட்சத்தில், ஊராட்சிகளின் ஆய்வாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் கிராம சபை கூட்டத்தைக் கூட்டலாம். சட்டத்தால் அதிகாரம் பெற்றவா்களைத் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களைக் கூட்டுவது சட்டத்துக்கு எதிரானது.

எனவே, இந்தச் சட்டத்தை மீறுபவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சி அல்லது தனி நபா்கள் கூட்டங்களை நடத்துவது பொதுமக்களை பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்பதால், இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கிராம சபை என்ற பெயரை தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறாா் என்று தனது செய்தியில் ஹன்ஸ்ராஜ் வா்மா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.