டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தளர்வுகளுடன் ஜன.31 வரை ஊரடங்கு; காணும் பொங்கலுக்கு மெரீனாவில் அனுமதியில்லை

தமிழகத்தில் தற்போதிருக்கும் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
தளர்வுகளுடன் ஜன.31 வரை ஊரடங்கு; காணும் பொங்கலுக்கு மெரீனாவில் அனுமதியில்லை
Updated On :31 டிசம்பர் 2020, 10:53 am

DIN


சென்னை: தமிழகத்தில் தற்போதிருக்கும் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 

தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறையது, நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் 31.12.2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின்அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை உள்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

1) புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆயதிரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும். 

2) மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

3) தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

மேலும், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.