புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலையை நிரந்தரமாக மூட முடிவு: தொழிலாளர்கள் அதிர்ச்சி
புதுச்சேரியின் பாரம்பரியமான ஏஎப்டி பஞ்சாலையை நிரந்தரமாக மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் முடிவு தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரியின் பாரம்பரியமான ஏஎப்டி பஞ்சாலையை நிரந்தரமாக மூட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் முடிவு தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி-கடலூர் சாலையில் புதுவை அரசுக்கு சொந்தமான ஏஎப்டி ஆலை உள்ளது. புதுவையில் பிரெஞ்சு ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இந்த ஆலை இயங்கி வருகிறது. 1983-ஆம் ஆண்டில் ஜாட்டியா என்பவர் நிர்வாகத்தில் இருந்தபோது இந்த ஆலை மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே, இந்த ஆலையை மத்திய அரசு கையகப்படுத்தி தொடர்ந்து நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து 24.12.1984-இல் இந்த ஆலையை அவசர சட்டத்தின் மூலம் மத்திய அரசு கையகப்படுத்தியது. இருப்பினும், பின்னர் 10.6.1986-இல் இந்த ஆலையை புதுவை அரசிடம், மத்திய அரசு ஒப்படைத்தது. புதுவை அரசும் இந்த ஆலையை தொடர்ந்து நடத்தி வந்தது.
1986-இல் இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டபோது வயது முதிர்வு, நோய் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி சுமார் 2,000 தொழிலாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களின் வாரிசுகளில் சிலருக்கு மட்டும் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. அப்போது 8,000 தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில் இந்த ஆலை லாபத்தில் இயங்கி வந்தது. ஆண்டுக்கு ரூ.150 கோடியும் ஏற்றுமதி செய்து வந்தது.
1994-இல் இந்த ஆலையில் தொழிற்சங்கங்கள் அமைப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தொழிற்சங்கங்கள் தொடங்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தொழிலாளர்கள் வாக்களித்தனர்.
இதன்படி பல்வேறு தொழிற்சங்கங்களும் தொடங்கப்பட்டு லாபகரமாகவே ஆலை தொடர்ந்து இயங்கியது. 2000-ஆவது ஆண்டில் இந்த ஆலையில் சுமார் 6 ஆயிரத்து 600 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
அதைத் தொடர்ந்து வயது முதிர்வால் ஓயவுப்பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்களுக்குப் பதிலாக தொழிலாளர்கள் யாரும் கூடுதலாக நியமிக்கப்படவில்லை. ஆள்கள் பற்றாக்குறை இருந்த நிலையில், படிப்படியாக ஆலையில் உற்பத்தியும் சரிந்தது. நவீன இயந்திரங்களும் ஆலையில் கொள்முதல் செய்யப்படாத நிலையில் தொழில்நுட்ப ரீதியாகவும் உற்பத்தியில் ஆலை பின்தங்கியது.
இதனால் இந்த ஆலை படிப்படியாக நலிவடைந்தது. இந்த ஆலைக்கு ரூ.700 கோடி ஒதுக்கி ஆலையை நவீனமயமாக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்தன. ஆனால், புதுவை அரசும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசிடம் பேசியும் அதற்கான நிதியைப் பெற்றுத்தரவில்லை.
இந்நிலையில் 5.11.2013-இல் இந்த ஆலைக்கு லேஆப் விடப்படுவதாக (பணி ஏதும் செய்யாமல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கும் நடைமுறை) அறிவிக்கப்பட்டது. ஆலையில் உள்ள ஏ, பி பிரிவுகளுக்கு லேஆப் விடப்பட்டாலும், சி பிரிவு மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது.
கடந்த 6 ஆண்டுகளாக லேஆப் காலத்தில் தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதிலும், கடந்த 13 மாதங்களாக லேஆப் ஊதியமும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த ஆலையில் 600 தொழிலாளர்களும், 60 ஊழியர்களும் தங்களுக்கு விருப்ப ஓய்வு தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆலையின் நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி, புதுவை அரசின் தொழிலாளர் துறை செயலருக்கு திங்கள்கிழமை ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "1947-ஆம் ஆண்டு தொழிலாளர் தாவா சட்டம் 25 ஓ பிரிவின்படி எதிர்வரும் ஏப்.30-ஆம் தேதியுடன் ஏஎப்டி ஆலை அதிகாரப்பூர்வமாக மூடப்படும். அன்றுடன் பணியில் இருக்கும் 619 தொழிலாளர்களின் பணி சேவை நிறைவுபெறகிறது. இந்த தொழிலாளர்களுக்கு தொழில் தாவா சட்டம் பிரிவு 25-இன் கீழ் இழப்பீடு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் ஏஎப்டி ஆலை ஏப்.30-ஆம் தேதியுடன் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த கடிதத்தின் நகல் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டு பழமையான இந்த ஆலை மூடப்படுவது பொதுமக்கள், தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...