/

ஏஎப்டி ஆலையை தொடர்ந்து இயக்க திமுக வலியுறுத்தல்

ஏஎப்டி பஞ்சாலையை தொடர்ந்து இயக்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2020, 4:43 pm

DIN


புதுச்சேரி: ஏஎப்டி பஞ்சாலையை தொடர்ந்து இயக்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவக்குமார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலையை நிரந்தரமாக மூடப்படுவதாக, ஆலையின் நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷிணி , தொழிலாளர் துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஏப்.30-ஆம் தேதியுடன், அதிகாரப்பூர்வமாக இந்த ஆலை மூடப்படுவதாக, நெஞ்சைப் பதற வைக்கக் கூடிய செய்திகள் வந்துள்ளன.

புதுவை அரசியல் வரலாற்றின் கறுப்பு தினமாக இன்றைய தினத்தை திமுக கருதுகிறது. 33 சட்டப்பேரவை உறுப்பினர்கள், இரண்டு எம்பிக்கள், முதல்வர் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும், நம் மக்களுக்கு வேலையும் கொடுக்க முடியவில்லை, வேலையில் இருப்பவர்களையும் காப்பாற்ற முடியவில்லை, இதற்கெல்லாம் முடிவும் தெரியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

அடுத்தடுத்து மீதமுள்ள ஆலைகளுக்கும், என்ன கதி என்பது தெளிவாகத் தெரிகிறது. தொகுதிக்கு 500 பேர் என 15,000 பேர் பணியாற்றும் போது,15,000 குடும்பங்கள் சுபிட்சமாக இருக்கும். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதியமாக வழங்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள், தினசரி உள்ளூர் மளிகைக் கடைகளிலும், துணிக் கடைகளிலும், உணவகங்களிலும்தான் புழங்கிக்கொண்டிருக்குமே தவிர ,நமது எல்லைகள் தாண்டி சென்னைக்கு கூட செல்லாது. உள்ளூர் வியாபாரமும், செழிக்கும், மக்களும் மகிழ்வார்கள்.

தொழிலாளர்கள் மூன்று ஷிப்டுகளுக்காக சென்றுகொண்டும், வந்துகொண்டும் இருக்கும்போது, அனைத்து மக்களுக்கும் ஒரு பாதுகாப்பும் கிடைக்கும். இது போன்ற ஆலைகளை நான்கு திசைகளிலும் நிறுவ வேண்டும். தொகுதிகள் தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று, அவர்கள் குடும்பங்கள் செழித்து வாழ வேண்டும் என திமுகவின் சார்பாக நாங்கள் மனதார திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, இருக்கின்ற ஆலையையும் மூடச்சொல்லி, மக்களின் உணர்வுகளையும், வாழ்வாதாரங்களையும் அழித்துவிட நடக்கும் முயற்சி மனசாட்சிக்கு விரோதமானது.

புதுவை முதல்வர், உடனடியாக அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு, அமைச்சரவையைக் கூட்டி, இப்பிரச்னையில் தலையிட்டு, ஆலையின் நிர்வாக இயக்குநரின் உத்தரவை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், ஆலை முழுவீச்சில் இயங்க ஆவன செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.