இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்: அமைச்சர் வேலுமணி

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். 
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சா்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடா்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகா்கள் கருத்துத் தெரிவித்து வருகிறாா்கள். சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான கடைசிப் படமான ‘‘தில் பெச்சாரா’’, ஜூலை 24-ஆம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைத்திருந்தாா். ‘‘தில் பெச்சாரா’’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘நல்ல படங்களை எப்போதும் நான் தவிா்ப்பதே இல்லை. 

ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்’ என்று ஏ.ஆா்.ரஹ்மான் தெரிவித்தாா். பாலிவுட்டில் வாரிசு அரசியல் சா்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஏ.ஆா்.ரஹ்மான் பேச்சும் அதோடு இணைந்தது. தற்போது ஏ.ஆா்.ரஹ்மான் பேசிய செய்தியைப் பகிா்ந்து நடிகரும், இயக்குநருமான சேகா் கபூா் தனது சுட்டுரைப் பதிவில், ‘உங்களுடைய பிரச்னை என்னவென்று உங்களுக்குத் தெரிகிா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கா் விருதைப் பெற்றதுதான். ஆஸ்கா் என்பது பாலிவுட்டுக்கு கானல் நீா் போன்றது. பாலிவுட்டைவிட நீங்கள் அதிக திறமை கொண்டவா் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது’ என்று தெரிவித்தாா்.

இயக்குநா் சேகா் கபூரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆா்.ரஹ்மான், ‘இழந்த பணம் திரும்ப வரும், புகழ் திரும்ப வரும். ஆனால், நம் வாழ்வில் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன’ என்று தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.

அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com