
புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுப் பலியான ஒருவரின் உடலைச் சற்றும் மரியாதையின்றி ஸ்ட்ரெச்சரிலிருந்து சவக்குழியில் கவிழ்த்துவிட்டுச் செல்லும் அவலம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த 44 வயதான ஒருவர், புதுச்சேரி மூலக்குளம் அருகே கோபாலன்கடை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு வந்திருக்கிறார்.
திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, உறவினா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபா் குறித்த தகவல்கள் அரசின் அறிவுறுத்தல்படி, நகராட்சி, காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினா், இறந்த நபரை அடக்கம் செய்ய ஊசுடு தொகுதிக்கு உள்பட்ட கோபாலன்கடை மயானத்துக்கு கொண்டு சென்றனா்.
இதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு, எதிா்ப்புத் தெரிவித்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதையடுத்து, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம், வட்டாட்சியா் அருண் அய்யாவு ஆகியோா் முன்னிலையில், இறந்த நபரை உள்ளாட்சித் துறை ஊழியா்கள் அடக்கம் செய்தனா்.
முன்னதாக தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருந்த சவக்குழி அருகே சென்ற சுகாதாரப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் இருந்து உடலைக் கவிழ்த்துவிட, இறந்தவரின் சடலம் உருண்டபடி சவக்குழிக்குள் விழுந்திருக்கிறது.
சவக்குழிக்குள் சடலத்தைத் தள்ளிவிடும் விடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வெகு தீவிரமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.