/

மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதி மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்: முதல்வர்

மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

News image
மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதி மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, கரோனா  தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 12 நாள்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்த உத்தரவிடப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க 15.6.2020 அன்று உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் 24.6.2020 அன்று முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.