'காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்' செய்யும் சட்டம்: ஸ்டாலின் வலியுறுத்தல்
'கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


'கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர இன்று விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஆவேசமான எதிர்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. இந்த வேளாண் சட்டங்களினாலும் - அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ள எடப்பாடி அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையாலும், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது.
மூன்று வேளாண் சட்டங்களின் பாதிப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றிட - குறைந்த பட்ச ஆதார விலைக்குக் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிறைத் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கின்றன. கேரள மாநில அரசு சமீபத்தில் வரவேற்கத்தக்கச் சட்டம் ஒன்றை - இந்தியாவிலேயே முதல் முறையாகக் கொண்டு வந்து - காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. 16 வகை காய்கறிகளுக்கு விவசாயிகளின் உற்பத்தி விலையில் இருந்து 20 சதவீதம் அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் - இந்த காய்கறிகளின் சந்தை விலை குறைவாக இருந்தால் கூட இந்த அடிப்படை விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் உறுதி செய்திருக்கிறது. விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றும் அந்தச் சட்டம் தமிழ்நாட்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இங்குள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியோ விவசாயிகள் பற்றியும் கவலைப்படவில்லை; கேரள அரசு கொண்டு வந்தது போன்றோ, பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது போன்றோ எந்த விதமான “விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்களையும்” கொண்டு வரத் துணிச்சல் இல்லை.
அ.தி.மு.க. அரசுக்கு இப்போது கடைசி நேர அவசரம் - டெண்டர்! கமிஷன்! அதைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் தடுக்க மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் - வரம்பின்றி இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி ஊழல் டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவதைக் கைவிட்டு- காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி - கேரள அரசு போல் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. அரசு உடனே சட்டம் கொண்டு வரவில்லையென்றால் - விரைவில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் திராவிட முன்னேற்றக் கழகம், கேரள மாநில அரசு கொண்டு வந்திருப்பது போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரும் என்றும் - அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும்; விவசாயப் பெருமக்களின் துயர் துடைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் படிப்படியாக மேற்கொள்வோம் என்றும்; உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...