/

சிறைக் கைதி மரணம்: தலைவர்கள் கண்டனம்

கடலூரைச் சேர்ந்த செல்வமுருகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
காடாம்புலியூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட செல்வமுருகனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய டிஎஸ்பி பாபு பிரசாத்.
Updated On :7 நவம்பர் 2020, 4:28 pm

DIN

கடலூரைச் சேர்ந்த செல்வமுருகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர், நெய்வேலி நகரக் காவல் நிலையப் போலீசாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம்  காவல் நிலைய இரட்டைக் கொலைக்குப் பிறகு - உயர்நீதிமன்றமே எச்சரித்தும் - தமிழகக் காவல் துறைத் தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும் - இதுபோன்ற போலீஸ் ‘டார்ச்சரும்’ , அதனால் ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்திற்குரியது.

பாமக நிறுவனர் ராமதாஸ், காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக வந்துள்ள செய்திகள் வேதனையளிக்கின்றன.  காவல்நிலையச் சாவுகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்!

நெய்வேலி காவல்நிலையச் சாவுக்கு காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட செல்வமுருகன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கடலூர் மாவட்டம், காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் நெய்வேலி காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டு உள்ளார். அதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவரது படுகொலைக்கு காரணமான காவலர்களைக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரைச் சோ்ந்தவா் செல்வமுருகன் (40). குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவா், வழிப்பறி வழக்கில் நெய்வேலி நகரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விருத்தாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவருக்கு புதன்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

காவல்துறையினர் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.