ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த  இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ்குமார்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ்குமார்


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த  இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.
 
சென்னையில் உள்ள ரயில்வே தலைமை அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு வியாழக்கிழமை இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபா், தன்னுடைய பெயர் அப்துல்கரீம் என்றும் ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வெடி குண்டுகள் வைத்திருப்பதாகவும், இதற்காக தன்னுடன் சேர்த்து 10 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், குண்டு வெடித்தால் பல உயிரிழப்புகள் ஏற்படும் முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதையடுத்து சென்னை கட்டுப்பாடு அறையில் இருந்து உடனடியாக ஈரோடு ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு முழுவதும் வியாழக்கிழமை இரவு காவலர்கள் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 

கட்டுப்பாடு அறைக்கு வந்த செல்லிடப்பேசி எண்ணின் டவர் சிக்னலை வைத்து ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.  அப்போது, ஈரோடு பேருந்து நிலையம் அருகில் மிரட்டல் விடுத்த செல்லிடபேசி  சிக்னல் கிடைத்தையடுத்து பேருத்து நிலையம், நாச்சியப்பா வீதி, மூலப்பட்டறை சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். 

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கர்நகரை சேர்ந்த ரங்கராஜன் மகன் சந்தோஷ்குமார்(32) என்பதும், சென்னை கட்டுப்பாடு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 

இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே இதுபோன்று 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com