மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
உயர்நீதிமன்றம்
Updated On :8 அக்டோபர் 2020, 9:47 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதில், பாரதியார், பெரியார், வேளாண் பல்கலைக்கழகம் உள்பட 8 பல்கலைக்கழகங்களிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 106 பேராசிரியர் பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த பல்கலைக்கழகங்களில் 29 இடங்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 2 ஆயிரத்து 398 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். இங்கு 20 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து நிரப்ப உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர், மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆகியோர் வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு  உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.