பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நடிகர் ரஜினிகாந்த தாக்கல் செய்த சொத்துவரி வழக்கு தள்ளுபடி

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
நடிகர் ரஜினிகாந்த்
Updated On :14 அக்டோபர் 2020, 1:28 pm

DIN

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள எனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை வாடகைக்கு விடாமல் இதுவரை மூடிக்கிடக்கிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திருமண மண்டபத்துக்கான அரையாண்டுக்கான சொத்து வரி ரசீதை அனுப்பினார். அதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு சொத்து வரியாக ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதலே ராகவேந்திரா திருமண மண்டபம் மூடிக்கிடக்கிறது.

மேலும் மண்டபத்தை முன்பதிவு செய்தவர்கள் வழங்கிய முன்தொகையையும் திரும்ப கொடுத்துவிட்டோம். இந்த நிலையில் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி ஆணையர் சொத்து வரியை விதித்துள்ளார். மாநகராட்சி சட்ட விதிகளின்படி 30 நாள்கள் கட்டடம் மூடப்பட்டு இருந்தாலே, சொத்து வரியில் 50 சதவீத சலுகை பெற உரிமை உள்ளது. இந்த சலுகையை கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அந்த நோட்டீஸ் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு வரி தொகையில் இரண்டு சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். அந்த தொகைக்கு வட்டியும் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி நான் அனுப்பிய நோட்டீஸை பரிசீலித்து முடிவு எடுக்கும் வரை சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் மாநகராட்சி சட்ட விதிகளின்படி பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மாநகராட்சி ஆணையருக்கு கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி விட்டு உடனே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளீர்கள். கோரிக்கையை பரிசீலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாமா , ஒருவேளை நோட்டீஸை பரிசீலிக்காவிட்டால், அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம். அதனை செய்யாமல் அவசரமாக உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதத்துடன் (வழக்குச்செலவு) வழக்கை தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது, ரஜினிகாந்த் தரப்பு வழக்குரைஞர் வழக்கைத் திரும்ப பெற கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பதிவுத்துறையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பபெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வரிவிதிப்பு தொடர்பாக மனுதாரர் மாநகராட்சி நிர்வாகத்தை மீண்டும் அணுகவும், எந்த பதிலும் கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடரலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.