மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே கீழ் அம்பி கிராமத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியது.. விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் அதிகமாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியவுடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இச்சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினரும் இணைந்து 3500 இடங்களில் சுமார் 3.50லட்சம் பேர் கலந்து கொள்கிற ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். ஏழை மக்களுக்கு,விவசாயிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இதுவரை எந்த நன்மையையும் செய்யவில்லை.