2015 பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் பாடம் கற்கவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து

விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் சென்னை மாநகராட்சி பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
2015 பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் பாடம் கற்கவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து
2015 பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் பாடம் கற்கவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் சென்னை மாநகராட்சி பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ருக்மாங்குதன் தாக்கல் செய்த மனுவில், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி சென்னையின் 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் 5,574 விதிமீறல் கட்டடங்கள் கண்டறியபட்டுள்ளது. இதனால் சென்னை முழுவதும் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விதிமீறல் கட்டடங்கள் இருக்கலாம். அதிகாரிகள் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த கட்டடங்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுப்பதால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே 5 -ஆவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக  எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் 5-ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலை தான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பின்னரும் அரசு பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5 -ஆவது மண்டல உதவி ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க  உத்தரவிட்ட நீதிபதிகள்  விசாரணையை வரும் டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com