தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட வேண்டும் என  தேசிய ஆசிரியர் கூட்டணி செய்தி தொடர்பாளார் பா.அருணாசலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 1:22 pm

அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட வேண்டும் என  தேசிய ஆசிரியர் கூட்டணி செய்தி தொடர்பாளார் பா.அருணாசலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கரோனா தொற்றை கட்டுப்படுத்த, வீட்டை விட்டு யாரும் அநாவசியமாக வெளியே செல்லாதீர்கள். முகக்கவசம் அணியுங்கள், கை கழுவுங்கள் என பிரசாரம் செய்யும் அரசுதான், மாணவர்களே வராத பள்ளிக்கு, ஆசிரியர்களை வரவழைத்து, கரோனா பரவலை ஊக்குவிக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், வேடிக்கை பார்க்கிறது. கரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதம், பள்ளிகள் மூடப்பட்ட போது, ஆசிரியர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. 

பின்பு, பத்தாம் வகுப்புக்கு, ரிசல்ட் வெளியிடுவதற்காக, ஜூன் மாதத்தில் இருந்து, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டதால், ஜன.18ம் தேதியில் இருந்து, அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வர தொடங்கி விட்டனர். தற்போது மீண்டும் தொற்று வேகமாக பரவுவதால், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்பித்தல் பணி சுத்தமாக இல்லை. ஆனாலும், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகின்றனர். 

வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பொது போக்குவரத்து மூலம், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மத்தியில், தற்போது வேகமாக கரோனா தொற்று பரவி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர், தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுமுறை வேண்டும் ஆசிரியர்களில் பலர் 50 வயதை கடந்தவர்கள் என்பதால், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதித்தவர்களாக உள்ளனர். ஓய்வு பெறும் வயதை, 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தியதால், இவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

நோய் தொற்றால், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதால், விடுமுறை அறிவிக்க வேண்டும். வீட்டில் இருந்து ஆன்லைன் கற்பித்தலை தொடர தயார் என்கின்றனர். தேர்தல் நேர கூட்டங்கள், பிரசாரங்களால் தொற்று பரவிய போது, மவுனம் காத்த அதிகாரிகள், தற்போது அரசு ஊழியர்களுக்கு, தொற்று பரவும் சமயத்திலும், எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 20 அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்படும். வெள்ளிக்கிழமையுடன் பிளஸ் டூ செய்முறை தேர்வு முடிவடைந்து விட்டது.

எனவே அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக கோடை விடுமுறை விட வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.