
சௌதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர், இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சௌதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின்அஞ்சலின்படி, சௌதி அரேபியாவிற்கு வருகை தரும் புனிதப் பயணிகள் சௌதி அரேபியாவிற்கு புறப்படுவதற்கு முன் இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று மும்பை, இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகள் ஹஜ் 2021-ல் புனிதப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜுன் மாத மத்தியிலிருந்து புறப்பாடு விமானங்கள் இயங்கும். ஹஜ் 2021-ற்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்களாகவே முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் புறப்படும் நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி அவர்களுக்கு அளிக்கப்படும். எனவே, பயணத்தில் இடையூறு ஏற்படாவண்ணம் இருக்க பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தி கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2. ஹஜ் - 2021 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சௌதி அரசிடமிருந்து இதுவரை பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹஜ் - 2021-ன் அனைத்து செயல்முறைகளும் சௌதி அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.