லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தாமிரவருணி முதல் மடை பாசனத்தில் தண்ணீர் கிடைக்காததால் காய்ந்துபோன நெற்பயிர்கள்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். 

News image
வாகைக்குளம் பகுதியில் நீரின்றி வாடிய நெற்பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கிறார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:19 pm

DIN

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாசனத்திற்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகியதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை தாமிரவருணி பாசனத்தில் முதல் மடையாக உள்ளது வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய். இதன்மூலம் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், கோடாரங்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிகள் கடைமடைப் பகுதியாகும். இந்தப் பகுதியில் சீர்பாதக்குளம், ஞானப் பட்டர் குளம், புதுக்குளம், சுமைதாங்கிக்குளம் ஆகிய குளங்களின் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கு 10 ஆண்டுகளாக ஜூன் 1 இல் தண்ணீர் திறக்காத நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 இல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் தண்ணீர் திறந்து சுமார் 80 நாட்களுக்கும் மேலான நிலையில் முதல் கால்வாயான வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயின் கடைமடைப்பகுதிக்குத் தண்ணீர் வரவில்லை.

YouTube video thumbnail

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அந்தப் பகுதிகளில் இன்று ஆய்வு செய்தார். அவரிடம் விவசாயிகள் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் கடைமடைப் பகுதியான வாகைக்குளம், மன்னார்கோவில் பகுதிக்கு 18 கி.மீ.தூரம் உள்ளது. இதில் கால்வாயின் குறுக்கே பல பாலங்கள் உள்ளது. பல ஊர்களையும் கடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் கடைமடை வரை தண்ணீர் முழுமையாக வருவதில்லை.

கால்வாயை பொதுப்பணித்துறை முறையாகப் பராமரிக்காததால் பல பாலங்களில் கழிவுகள் அடைத்து நீர்வரத்து தடுக்கப்படுகிறது. கால்வாயில் 54 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் 5 கனஅடி நீர் கூட கடைமடைப்பகுதிக்கு வருவதில்லை. மேலும் வயல்கள் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு பாசனப்பரப்பு குறைந்த நிலையிலும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. இரு போகம் விவசாயம் செய்த நிலையில் ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் வராததால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் காய்ந்துவிட்டது. 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கார் சாகுபடியில் விவசாயமே நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்தனர். மேலும், போர்க்கால அடிப்படையில் கால்வாயை முழுமையாத சீரமைத்து தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்வதோடு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் விஷ்ணு விவசாயிகளிடம் உறுதியளித்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.