ஈரோடு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள்
ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள்


ஈரோடு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்டம், புறநகர் கிழக்கு மாவட்டம், புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே. எஸ். தென்னரசு, பகுதி செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினர். 

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்க வேண்டும். அம்மா மின் கிளினிக்குகளை மூடுவதை கைவிட வேண்டும். கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் மேயரும் மாநகர், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான மல்லிகா பரமசிவம், அவை தலைவர் பி.சி. ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணியம், கிட்டுசாமி, முன்னாள் எம்.பி.க்கள் செல்வகுமார சின்னையன், முன்னாள் துணை மேயர் கே. சி. பழனிச்சாமி,ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ்,  மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி,மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யூனிவர்சல் நந்தகோபால், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்த வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சத்தி ரோட்டில் ஒரு பகுதி கூட்டம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 

முன்னெச்சரிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார்  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்த சக்தி ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஈரோட்டில் இருந்து கோபி சத்தியமங்கலம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

சத்தியமங்கலம் கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு போக்குவரத்து நடந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருடன் போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர். இதனால் சத்தி ரோட்டில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com