/

அறுவடைப்பணிக்கான தொழிலாளர் பற்றாக்குறை: விவசாயிகள் தவிப்பு

காவிரிக்கரை பாசனப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், அறுவடைப்பணிக்கான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

DIN

காவிரிக்கரை பாசனப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், அறுவடைப்பணிக்கான தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவிவருவதால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உரிய காலத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். 

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கூடக்கல், குப்பனூர், செக்கானூர் உள்ளிட்ட காவிரிக்கரை பசானப்பகுதிகளிலும், பில்லுக்குறிச்சி, கன்னிவாய்கால், எல்லமடை,அரசிராமணி உள்ளிட்ட காவரிகால்வாய் பாசனப்பகுதிகளிலும், நிகழாண்டில் வழக்கத்தை விடக் கூடுதலான நிலப்பரப்பில், நெல் சாகுபடி செய்யப்பட்டது.

காவிரி ஆற்றில் பாசனத்திற்காக போதிய அளவு நீர் திறக்கப்பட்டதாலும், மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு உரிய அட்டவணைப்படி முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், இப்பகுதியில் நெல் விளைச்சல், வழக்கத்தை விட நிகழாண்டில் சற்று அதிகரித்துள்ளது.

Story image

காவிரிப் பாசனப் பகுதியில், நெல் அறுவடைப்பணிகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஒரே சமயத்தில் அதிகப்படியான நிலப்பரப்பில், நெல் அறுவடைப்பணிகள் நடைபெறுவதால், இப்பகுதியில் அறுவடைப்பணிக்கான தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாவட்டப் பகுதியிலிருந்தும், உள்மாவட்டங்களில் இருந்தும் நெல் அறுவடை பணிக்காகத் தொழிலாளர்கள் வரவழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட தொலைவு பயணம் செய்து வந்து அறுவடைப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், பயணத்தொலைவினை மேற்கோள்காட்டிக் கூடுதல் ஊதியம் கேட்பதாகவும், இதனால் தங்களுக்குக் கூடுதலான செலவீனம் ஏற்படுவதாகவும், போதிய பாதை வசதி உள்ள விவசாய நிலங்களில், அறுவடை எந்திரங்களைக் கொண்டு அறுவடை பணிகள் நடைபெற்றபோதும், அறுவடை  எந்திரங்கள் நுழையமுடியாத சந்தடியானப்பகுதகளில் நெல் சாகுபடி செய்திட விவசாயிகள், அறுவடைப்பணிக்கு போதிய ஆள்கள் கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.