காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்துக்குள்பட்ட குன்னத்தூரில்
காவேரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
காவேரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

புதுக்கோட்டை: காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டத்துக்குள்பட்ட குன்னத்தூரில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை வறண்டு கிடக்கும் தென் மாவட்டங்களுக்குத் திருப்பும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அண்மையில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின்படி, முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளும், 42170 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில், தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிமீ தொலைவுக்கு வைகை ஆறு வரை கால்வாய் வெட்டப்படும். 

இரண்டாம் கட்டத்தில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தத 220 ஏரிகள், 23,245 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மூன்றாம் கட்டத்தில், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டப்படும். இதில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 492 ஏரிகளும், 44,547 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு மக்களின் உற்சாக வரவேற்பிற்கிடையே டிராக்டரில் வருகை தந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

மொத்தத்தில் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கின்போது கடலில் கலக்கும் சுமார் விநாடிக்கு 6,300 கன அடி தண்ணீர் வறண்ட பகுதிகளுக்கு பாசனம், குடிநீர் வசதிக்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும்.

இப்பெருந்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக அரசின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்து பொக்லைன் இயந்திரங்களின் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அயோத்திக்கு அண்மையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோது நடத்தப்பட்ட நிகழ்ச்சியைப்போல அடிக்கல் நாட்டுவதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. ஏறத்தாழ யாகசாலை பூஜைபோல அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர், கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ். மணியன், திருச்சி வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளின் ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ரூ. 3,384 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம்
இத்துடன், காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் ரூ. 3384 கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 987 கிமீ தொலைவில் 21 ஆறுகள் மேம்படுத்தப்படும். 4,67,345 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் பழைமை மிக்க பாசனக் கட்டுமானங்களில் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ. 72 கோடியில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படும் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனால், கால்வாய்ப் பாசனத் திறன் 20 சதவிகிதம் அதிகரிக்கும்.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்ட விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்கள். 

பிரம்மாண்ட வரவேற்பு:  புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மதுரை சாலையில் இருந்து குன்னத்தூர் கிராமம் வரை சுமார் 2 கிமீ தொலைவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வழியெங்கும் கரகாட்ட ஏற்பாடுகளும், வெள்ளைக் குதிரைகளும் அலங்கார வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com